அண்மைய செய்திகள்

recent
-

அமைதியை உருவாக்க...... மீறப்படும் வாக்குறுதி!


ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான, ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத்தொடரில், தொடக்கவுரை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லா இலங்கையர்களினதும் ஈடுபாடு அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 30/1 தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில், சமர்ப்பிக்க வேண்டியுள்ள நிலையில் தான் அவரது இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.

30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பத்து மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், பொறுப்புக்கூறலுக்கான ஒரு பொறிமுறை பற்றிய முடிவுகள் எதையும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை.

அந்த தீர்மானத்தின் பிரதான அம்சங்கள் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும்தான்.பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக, கடந்த வாரம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்க முடியும் என்பதே, சர்வதேச சமூகத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருந்து வந்தது. இன்னமும் அந்த நிலை பெரியளவில் மாறவில்லை என்றே தெரிகிறது.

இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும், அமெரிக்காவும் கூட, பொறுப்புக்கூறல் முக்கியமானது என்பதை இப்போதும் வலியுறுத்தியிருக்கிறது.

நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முயற்சிகள் என்று அரசாங்கம் பல்வேறு அறிவிப்புகளை மேற்கொண்டிருக்கிறது. நடவடிக்கைகளை எடுக்கிறது.

ஆனாலும், நல்லிணக்கம் என்பது, வெறும் விழாக்களாலோ, செயற்பாடுகளாலோ மட்டும் வந்து விடாது. பொறுப்புக்கூறலைக் கடந்துதான் நல்லிணக்கம் அமைய முடியும். ஆனால் அரசாங்கமோ, பொறுப்புக்கூறலை ஒதுக்கி விட்டு நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை முன்னெடுக்கிறது.

இதனால்தான், நல்லிணக்கம் என்பதையே காண முடியவில்லை என்று கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

நல்லிணக்கத்துக்கான பயணம் நீண்டது சவால்கள் நிறைந்தது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நீண்ட பயணத்துக்கான திட்டங்களை அரசாங்கம் சரியாக வரையறுத்துச் செயற்படுகிறதா என்பதுதான், கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது.

இந்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையில் எழுப்பப்படவுள்ள கேள்விகளைப் பிரதிபலிப்பதாகவே அவரது தொடக்கவுரையில் இலங்கை தொடர்பாகத் தெரிவித்த சில கருத்துக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் தொடக்கவுரையில் சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு விடயங்கள் முக்கியமானவையாகத் தெரிகின்றன.

முதலாவது, - ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து தரப்பினதும் பங்களிப்பு.இரண்டாவது – ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒரு மூலோபாயத் திட்டம்.


இந்த இரண்டு விடயங்களிலும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில், அவர் திருப்தியைக் காணவில்லை என்றே தெரிகிறது.

இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்கின்ற போதிலும், இன்னும் அதிகமாகச் செய்யப்பட வேண்டும் என்பதில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனோ அல்லது தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலோ முரண்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டியுள்ளது என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் விடயத்தை எவ்வாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதே முக்கியமானது.

ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து இலங்கையர்களினதும் பங்களிப்பு அவசியமானது என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கருத்து, தமிழர் தரப்பை அரசாங்கம் திருப்திப்படுத்த தவறியுள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் அரசாங்கம் தமிழர் தரப்புடன் கலந்துரையாடத் தவறியிருக்கிறது, அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர், அரசாங்கம் கொழும்பிலேயே நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதாகவும் தம்முடன் அத்தகைய முயற்சிகள் பற்றி எதுவும் பேசப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோலவே, நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக, இரா. சம்பந்தனும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில், தமிழர் தரப்பு ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகிறது.

அந்த தீர்மானம், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுனர்களின் பங்களிப்புடன், விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருந்தது.

ஆனால், அரசாங்கமோ, வெளிநாட்டு நீதிபதிகளுக்கு விசாரணைப் பொறிமுறையில் இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

இது, ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள், எல்லாத் தரப்பினதும் பங்களிப்புடன், இடம்பெறவில்லை என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.

சம்பந்தப்பட்ட பங்காளர்கள் அனைவரினதும் ஈடுபாட்டுடன், இலங்கை அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே அதன் ஒரு பகுதியில் கூறப்பட்டிருந்தது.

எனினும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில், பிரதான தரப்பினரான தமிழர் தரப்பின் கருத்துக்களை செவிமடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையான ஒரு பொறிமுறையை நோக்கி நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.

இது சர்வதேச சமூகத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கருத்தில் மட்டும் வெளியாகவில்லை.

அமெரிக்க காங்கிரஸ் வெளியுறவுக் குழுவின் ஆசிய பசுபிக் உபகுழுவில், கடந்த 9ம் திகதி நடந்த இலங்கை தொடர்பான விவாதம் ஒன்றில், போர் தொடர்பாக பொறுப்புக்கூறும் உள்ளகப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மறுப்புத் தெரிவித்திருப்பது குறித்து, அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழு தலைவர், மாட் சால்மன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜெனீவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறையாகச் செயற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்பதை, சர்வதேச சமூகம் அதிருப்தியுடன் தான் பார்க்கிறது என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில், அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்க வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கருத்தை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது, இப்போது நடந்து கொண்டிருக்கும் ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, ஜெனீவா தீர்மானத்தை செயற்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டம் ஒன்றையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்பார்க்கிறார்.

எந்தெந்த செயற்பாடுகள், எந்தெந்த காலவரிசைப்படி செயற்படுத்தப்படும் என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே அவர் எதிர்பார்க்கும் திட்டம்.

அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான செயற்பாடுகளை மந்தகதியிலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை வேறொரு திசையிலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால்தான் தெளிவான காலவரிசைப்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தை அரசாங்கத்திடம் ஐ.நா. எதிர்பார்க்கிறது. ஆனால், அரசாங்கமோ காலவரிசைப்படுத்தப்பட்ட ஒரு திட்டத்துக்கு இணங்கும் போலத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தனது தொடக்கவு ரையில் பொதுவாகக் குறிப்பிட்ட ஒரு விடயம் இங்கு கவனத்தை ஈர்க்கிறது.

எல்லா அரசாங்கங்களும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முழுமையான மதிப்பை அளிக்குமாறும், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகளின் பரிந்துரைகளையும், தமது பணியகத்தின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டிருந்தார்.

அவரது இந்தக் கோரிக்கை இலங்கைக்கும் நன்றாகவே பொருந்தக் கூடியது.

ஐ.நாவிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி களை நிறைவேற்றும் விடயத்தை இலங்கை சரியாக அணுகத் தவறியதால் தான், அவரது கோரிக்கை இலங்கைக்கும் பொருத்தமுடையதாகத் தெரிகிறது.

அமைதியை உருவாக்க...... மீறப்படும் வாக்குறுதி! Reviewed by Author on June 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.