அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தால் நொந்து போயிருக்கும் எம்மை சிலர் குழப்ப முனைகிறார்கள்! சி.வி. விக்னேஸ்வரன்

வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தைப் பகுதியில் அமைப்பதற்கு உடனடியாக காணியை கையளிக்க முடியுமென வடமாகாண காணி ஆணையாளர் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு 2010 ஆம் ஆண்டிலேயே மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓமந்தையில் அந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தவேண்டுமென்றால் அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (யு.டி.ஏ.) அனுமதிவேண்டுமென்று சிலர் கூறினர், இந்த நிலையம் விரைவில் அமைக்கப்படுவதை தட்டிக்கழிக்க முற்படுவது குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுபற்றி முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

ஓமந்தையானது ஒரு கிராமமாகும். அது எந்தவொரு நகரத்திற்குள்ளும் அடங்கவில்லை. இதனால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறப்படவேண்டுமென்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்ட வேளையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருக்கும் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸுடன் எனது செயலாளர் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான அனைத்து விதமான அனுமதிகளும் எப்போதோ பெறப்பட்டு அந்த இடம் மத்திய நிலையத்தை அமைப்பதற்கு மிக நீண்டகாலமாக தயார் நிலையிலுள்ளது. இதற்கு மேலதிகமாக எந்தவித அனுமதியும் பெறப்படவேண்டிய தேவையில்லையெனக் கூறியுள்ளார்.

இதேநேரம், ஓமந்தைப் பகுதியில் இந்த மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பாக வடமாகாண காணி ஆணையாளரிடமிருந்தும் முழுமையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக எவ்வேளையிலும் கையளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் இதில் எவ்வித சிக்கல்களும் இல்லையெனவும் அவர் எனக்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கடிதத்தின் பிரதிகள் வடபகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு எந்தவிதமான தடங்கல்களும் இல்லை.

மக்களின் மனதை நோகடிக்கும் விதத்திலும் அவர்களது நம்பிக்கையை வீண்போகச் செய்யும் விதத்திலும் சிலர் நடந்து கொள்வது வேதனைதரும் விடயமாகும். யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்து நொந்து போயிருக்கும் எமது மக்களுக்கு கிடைக்கவேண்டியவற்றை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சிலர் அரசியலாக்கி சுயலாபம் காண முயல்வது மிகவும் வேதனைதருகிறது.

எமது மக்களின் எதிர்காலத்தை முன்னிட்டாவது எவ்வித தடங்கலுமின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தால் நொந்து போயிருக்கும் எம்மை சிலர் குழப்ப முனைகிறார்கள்! சி.வி. விக்னேஸ்வரன் Reviewed by NEWMANNAR on July 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.