சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்...
சுவாதி கொலை வழக்கில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர் பெயர் ராம்குமார் என்றும், அவர் பொறியியல் பட்டதாரி எனவும் தெரியவந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுவாதி கடந்த 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளி யார் என பொலிசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
பின்னர் இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை செய்த பொலிசார் சுவாதி கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஒரு நபரின் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.
பல கோணங்களில் வீடியோ காட்சிகளை ஆராய்ந்த பொலிசார் அந்த சந்தேக நபர் தான் சுவாதியை கொலை செய்துள்ளதை உறுதி செய்து அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினர்.
சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
சுவாதியை ரெயில் நிலையத்தில் வெட்டி கொன்ற கொலையாளி சுவாதியின் செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த கொலையாளி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சுவாதியின் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்ததால் கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தினர். இதுவே கொலையாளியை பிடிக்க பொலிசாருக்கு உதவியாக இருந்தது.
சிசிடிவி வீடியோ காட்சிகளில் கிடைத்த புகைப்படத்தை வைத்து சென்னை சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி தனிப்படை பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டைக்கு விரைந்த தனிப்படை பொலிசார், அங்கு பதுங்கியிருந்த கொலையாளியை அதிரடியாக கைது செய்தனர்.
Go to Videos
சுவாதி கொலை வழக்கு குற்றவாளி கைது! கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி!
இதில் கொலையாளியின் பெயர் ராம் குமார் என்றும், அவர் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் பைம்பொழி கிராமத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், பொறியியல் பட்டதாரியான ராம்குமார் ஆலங்குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.
தனிப்படை பொலிசார் ராம்குமாரை மடக்கி கைது செய்ய முயன்ற போது, அவர் தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பின்னர் கழுத்து அறுப்பட்ட நிலையில் அவரை கைது செய்த பொலிசார் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதன் பின்னர் நெல்லை கொண்டு வரப்பட்ட ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னைக்கு வேலை தேடி வந்ததாக கூறப்படும் ராம்குமார், சுவாதியின் பகுதியான சூளைமேட்டில் 3 மாதங்கள் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், மென்பொறியாளர் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக பொலிசாரின் முதல்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்...
Reviewed by Author
on
July 02, 2016
Rating:

No comments:
Post a Comment