வடக்கு முஸ்லிம் மக்களின் துரித மீள்குடியேற்றம், தமிழ் மக்களுக்கு பலம்!
வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தற்போதைய ஆட்சியில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை தமிழருக்குப் பலம்மிக்க ஒன்றாக அமைந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்தும் வகையிலான நடமாடும் சேவைக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.
இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது மக்களின் மீள்குடியேற்றம் என்பது பலராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ள நிலையில் அதற்கான சூழல் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கான தேவைகள் எமது அரசாங்கத்தின் ஊடாகவும், புலம் பெயர்ந்த இஸ்ஸாமிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டும் நிறைவேற்றித் தருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நாம் இன்று வரை தேசிய இனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருகின்றோம். இதில், எமக்கான உரிமைகள் மத்திய அரசாங்கத்தினால் மழுங்கடிக்கப்பட்டு வருவது காலம் காலமாகத் தொடரும் அவலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் எமது மண்ணின் உரிமைகளில் ஒன்றான மீள்குடியேற்றம் என்பது எமக்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்கையில் எமக்கான தேவைகளைத் தற்போதைய சூழலை உரிய வகையில் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளாவிடில் இதற்கான வாய்ப்புக்கள் பின்னர் இல்லாமல் போய்விடும் எனவும் தெரிவித்தார்.
மீள்குடியேற்றச் செயலணிக் குழு, யாழ் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்டத்திலுள்ள வேலணை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய மூன்று பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தினைத் துரிதப்படுத்தும் வகையிலான மக்கள் நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் மீள்குடியேற்றச் செயலணிக் குழுவின் தலைவர் எம்.ஏ.சுபியான் தலைமையில் யாழ். ஒஸ்மானியக்கல்லூரியில் இடம்பெற்றது.
வடக்கு முஸ்லிம் மக்களின் துரித மீள்குடியேற்றம், தமிழ் மக்களுக்கு பலம்!
Reviewed by Author
on
August 21, 2016
Rating:

No comments:
Post a Comment