அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதமானவையே செலவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு....


வடமாகாண சபை 2016ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 20 வீதமான நிதியையே கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி வரையில் செலவிட்டுள்ளதாக நிதி முன்னேற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டங்களுக்கான பௌதீக முன்னேற்ற அறிக்கையை தாம் முதலமைச்சரிடம் கேட்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார்.

மாகாணசபையின் உத்தியோகபூர்வ நிதி முன்னேற்ற அறிக்கையில் நடப்பாண்டுக்கு(2016) ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த நிதியில் 20 வீதமான நிதியையே கடந்த ஜூலை 31ம் திகதி வரையில் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் முதலமைச்சர் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 341 மில்லியன் நிதியில் 13 வீதமான நிதியையும், விவசாய அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 410 மில்லியன் நிதியில் 33 வீதமான நிதியையும், கல்வி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மில்லியன் ரூபாய் நிதியில் 18 வீதமான நிதியையும் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 932 மில்லியன் ரூபாய் நிதியில் 17வீதமான நிதியையும், மீன் பிடி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 408.30 மில்லியன் ரூபாய் நிதியில் 33 வீதமான நிதியையும் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒட்டு மொத்த நிதியில் 20 வீதமான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி பௌதீக முன்னேற்ற அறிக்கையை தாம் கேட்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிப்பிட்டுள்ளார். விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆண்டு நிறைவு வரையில் செலவிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஒதுக்கப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

இவை தொடர்பாக நாங்கள் முன்னர் கேள்வி எழுப்பியபோது சில வேலை திட்டங்களுக்கான நிதி கொடுக்கவேண்டியுள்ளதாகவும், வேறு சில காரணங்களும் கூறப்பட்டன.

மேலும் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆண்டு நிறைவுக்குள் செலவிடப்படாமல் பின்னர் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டமையினை முதலமைச்சரே சபையில் ஒத்துக் கொண்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிலை உண்டாகாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இவ்வாண்டும் கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி வரையிலான நிதி முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் 20 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை நானும் பார்த்திருக்கிறேன்.

அதனடிப்படையி ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான பௌதீக முன்னேற்ற அறிக்கையினை வெளிப்படுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்கவுள்ளேன் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார்.

இதேவேளை 2016ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் செய்யப்பட்ட வேலை திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் 23ம் திகதி முதலமைச்சர் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள், திணைக்கள தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதமானவையே செலவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.... Reviewed by Author on September 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.