வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டியதன் அவசியம்!
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை வடமாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னமானது குறைவடையவில்லை.
குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் விரைவாக சிவில் நிர்வாகத்தை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஆனால் இலங்கையின் விடயத்தில் இதுவரை யுத்தம் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னமானது மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்குமாறு தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் என்பன தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் அந்த வலியுறுத்தலுக்கு சாதகமான பதில்கள் கிடைக்காமல் உள்ளன.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த பான் கீ மூன் வடக்கு ஆளுநரை சந்தித்திருந்த போது இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.
அதாவது வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் இருப்பதாகவும் எனவே இராணுவத்தின் அளவை குறைக்கும் செயற்பாடுகளை மிகவும் விரைவாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் பான் கீ மூன் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களிலிருந்தும் வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்குமாறு வலியுறுத்தி வருகின்ற போதிலும் அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுவதை காணமுடியவில்லை.
குறிப்பாக அரசாங்கத்தின் சில பங்காளிக் கட்சிகள் இவ்வாறு எக்காரணம் கொண்டும் வடக்கிலிருந்து இராணுவத்தைக் குறைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரும் வடக்கில் இராணுவத்தை குறைப்பது தொடர்பாக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எவ்வாறெனினும் தற்போது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெலஉறுமய வடக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக குறைப்பதில் தவறில்லை என்று முதற்தடவையாக தெரிவித்திருக்கின்றது.
அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்ற வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் அவர்களின் நடமாட்டத்தினை மட்டுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் அறிவுறுத்தாவிடினும் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக நீக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும்.
காரணம் தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் இல்லை. எனவே அங்கு இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொள்வதில் அர்த்தமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருக்கின்றது.
அத்துடன் அவ்வாறு குறித்த பகுதியிலிருந்து இராணுவத்தை குறைக்கும் போது வேறு பகுதிகளிலுள்ள இராணுவ தலைமை அலுவலகங்களில் அவர்களை நிலைகொள்ளச் செய்ய வேண்டும். எவ்வாறாயினும் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த செயற்பாட்டினை முன்னெடுக்கும் போது அதிதுரிதமாக இராணுவத்தை தலைமையகங்களுக்கு மாற்றி அனுப்புவதும் சாத்தியப்படாது. அதனால் படிப்படியாகவே குறைக்க வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் வடக்கில் இராணுவத்தைக் குறைப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகமும் அச்சமும் நீங்கிவிட்டால் வடக்கிலிருந்து அனைத்து இராணுவ முகாம்களைக் கூட அகற்றுவதில் தவறில்லையென தெரிவித்திருக்கின்றார்.
அந்த வகையில் அரசாங்கமும் வடக்கிலிருந்து இராணுவத்தினரைப் படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் வாக்குறுதி அளித்திருக்கிறது.
நாடொன்றின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் இராணுவத்தின் பங்களிப்பானது மிகவும் அத்தியாவசியமானதாகும். அதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.
ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த நாட்டின் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலோ பொதுமக்களின் ஏனைய சமூக நடவடிக்கைகளிலோ இராணுவத்தினரின் தலையீடு எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
மாறாக சிவில் நிர்வாக செயற்பாடுகளில் பொலிஸாரும் அரசாங்கமும் ஈடுபடுவது அவசியமாகும்.இந்நிலையில் யுத்தம் நடைபெற்ற வடக்கிலும், இவ்வாறு சிவில் நிர்வாகம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடு இருக்கக்கூடாது.
யுத்தம் நடைபெற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் மற்றும் அவர்களின் விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
விசேடமாக யுத்தகாலத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் வடக்கு, கிழக்கில் மிக அதிகளவாகவே காணப்பட்டன.
இராணுவத்தினரின் அனுமதியின்றி ஒரு திருமணச்சடங்கைக்கூட வடக்கு மக்கள் மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்பட்டது.
அதனால் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பொதுமக்கள் பாரிய விரக்தியுடனேயே வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றனர்.
அதனால்தான் வடக்கிலிருந்து இராணுவத்தினரின் அளவை விரைவாக குறைக்கவேண்டுமென்று அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் குறித்த யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி இராணுவத்தினரின் தலையீடுகளை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதன்மூலமே சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதுடன் நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்கும் சாத்தியம் ஏற்படும்.
மாறாக யுத்தம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலத்திற்கு இராணுவத்தினரின் தலையீடு குறித்த பிரதேசங்களில் இருக்குமாயின் மக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை கூட வடக்கிலிருந்து இராணுவத்தினரின் அளவை விரைவாக குறைக்க வேண்டுமென கூறிவருகின்றது.
ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் கோரிக்கையைக்கூட அரசாங்கம் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இராணுவத்தினர் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவகங்களை நடத்துவதிலிருந்து பல்வேறு பொருளாதார செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையில் வடக்கில் இவ்வாறான ஒரு நிலை நீடிக்குமாயின் கவலைக்குரியதாகும்.
எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்கவேண்டுமென்ற அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் விரைவாக கவனத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளும் இராணுவத்தை குறைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.
ஒருகாலத்தில் வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்கக்கூடாது என்பதில் கடும்போக்குவாதத்துடன் செயற்பட்டு வந்த ஜாதிக ஹெல உறுமய தற்போது வடக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக குறைப்பதில் தவறில்லை என்று தெரிவித்திருக்கிறது.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஜாதிக ஹெல உறுமய வின் இந்த அறிவிப்பானது மிகவும் முக்கியமானதாகும்.
அதுமட்டுமன்றி பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
மாறாக கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மஹிந்த அணியினர் மாத்திரமே வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அதேவேளை, அரசாங்கம் மக்களின் உணர்வுபூர்வமான பிரதி பலிப்புகளுக்கு மதிப்பளித்து வடக்கிலிருந்து இராணுவத்தை குறைத்து மக்களின் இயல்புநிலை வாழ்க்கையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்புக்களின் கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டியதன் அவசியம்!
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment