இன்றைய கேள்வி பதில் (02-09-2016)
கேள்வி:−
மரியாதைக்குரிய வழக்கறிஞர் சுதன் அண்ணா! நான் கொழும்பிலிருந்து தர்ஷன். நான் இரண்டு வருடமாக ஒரு தொழில் நிறுவனத்தில் பணி புரிந்தேன். ஆனால் தினக்கூலிதான் தந்தார்கள். எங்கும் கையொப்பம் வாங்க வில்லை. அதனால் தற்போது வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள். நான் வேலை செய்ததற்கான எந்த ஆதரமும் என்னிடமில்லை. அதனால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்சமயம் வேறொரு தனியார் நிறுவனத்திடமிருந்து வேலைக்கு வந்துள்ளது.அண்ணா! வேலை தரும் நிறுவனத்தில் நான் மீண்டும் பாதிக்கப்படாமலிருக்க எவற்றை நான் அறிந்து கொள்ள வேண்டும்?
பதில்:−
அன்பான சகோதரரே! இன்றைய நவீன காலத்தில் தொழிலாளர் அமைப்புக்கள் பல தோற்றம் பெற்றமையானால் தொழிலாளர் நலச் சட்டங்கள் அதிகமாகவே உள்ளது. உலகில் முன்னைய காலத்தைப் போல முதலாளிகளால் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாதளவிற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் தனியார்துறையில் புதிதாக வேலைக்கு சேர்பவர்கள் சேவை உடன்படிக்கைகள் பற்றிய போதிய விளக்கம் இல்லாத காரணத்தினால் தொழிலுக்கு சேர்ந்து குறுகிய காலப்பகுதியில் தொழில்தருனரினால் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வேண்டா வெறுப்புடன் தொடர்ந்தும் வேலை செய்துவருகின்றனர் அல்லது புதிய தொழிலை நோக்கிச் செல்கின்றனர். ஆகவே இவ் இளைய சமூகத்தினர் எதிர்நோக்கும் இப்பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வை பெற்றுக்கொள்வதற்காக "சேவை உடன்படிக்கைகள்" தயாரிக்கப்படுகின்றன.
தொழிலாளிக்கு வழங்க வேண்டிய முதல் பணி நியமனக் கடிதம் ( Letter of Appointment)ஆகும். தொழிலாளி ஒருவருக்கு சேவைக்குச் சென்ற முதல் நாளே நியமனக் கடிதம் வழங்கப்பட வேண்டும். இது கடைகள் மற்றும் அலுவலகச் சட்டத்தின்கீழ் இயற்றப்பட்டுள்ள 15 ஆம் இலக்க ஒழுங்குவிதியின்கீழ் அமைய வேண்டும். இந்த நியமனக் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இவை அந்த நியமனக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என கூர்ந்து அவதானியூங்கள். ஏற்கனவே, உங்களுக்கு தொழில் நிர்வாகம் நியமனக் கடிதம் வழங்காவிட்டால் நீங்கள் அக் கடிதத்தைக் கோருவதற்கு உங்களுக்குப் பூரண உரிமையூண்டு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நியமனக் கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் :-
உங்களுடைய பெயரும் பதவியும்,
நியமனத் திகதி,
உங்களுடைய வேலைக்கு ஏற்ப உங்களுடைய தரம்,
உங்களின் அடிப்படைச் சம்பளமும், சம்பள உயர்வும் கிடைக்கும் முறை
வாரம் ஒருமுறை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதமொருமுறை சம்பளம் வழங்கப்படுவது பற்றிய விபரங்கள்,
உங்களுக்கு வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுமாயின் அவை யாவை என்பது பற்றி குறிப்பிட வேண்டும்.
தகுதிகாண் நிலை வழங்கப்படுமாயின் அதுபற்றிய விபரங்களைக் குறிப்பிடுதல் வேண்டும்.
உங்களுடைய சேவையை முடிவுறுத்துவதற்கு ஏற்புடைய நிபந்தனைகள் யாவை எனக் குறிப்பிடுதல் வேண்டும்.
நீங்கள் வேலை செய்ய வேண்டிய வேலை நேரங்கள் யாவை என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும்.
உங்களுக்கு உரித்தான விடுமுறை நாட்கள் வார விடுமுறை நாட்கள், வருடாந்த விடுமுறை நாட்கள் சமய,கலாச்சார விடுமுறை நாட்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் யாவை என்பது குறிப்பிடப்பட வேண்டும்
உங்களுக்கு உரித்தான மேலதிக நேர வேலைக் கொடுப்பனவுகள்
தொழில்தருநர் உங்களுக்கு வழங்கும் வைத்திய வசதிகள் யாவை எனக் குறிப்பிட வேண்டும்.
உங்களுக்கு உரித்தான சேமலாப நிதியின் அளவு , ஓய்வூதிய முறைமை உண்டாயின் அது யாது என விபரித்து பணிக்கொடை பற்றியும் குறிப்பிட வேண்டும்.
நீங்கள் பதவி உயர்வு பெறுவதாயின் அதற்கான சந்தர்ப்பங்கள் பற்றிய விபரங்கள்.
நீங்கள் பெறும் நியமனக் கடிதத்தில் நீங்கள் கையெழுத்திட்டு பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் சேவை உடன்படிக்கை என்றால் என்ன என்பதனையும் அறிந்து கொள்ள வேண்டும்.
சேவை உடன்படிக்கையானது, ஏனைய உடன்படிக்கைகளைப் போல இரு தரப்பினரிடையே குறிப்பிட்டதொரு பணியை மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு உடன்படிக்கையாகும். தொழில்துறையில் இது சம்பளம் அல்லது கொடுப்பனவு போன்ற நிதிசார் பிரதிபலனாகக் குறிப்பிட்டதொரு தரப்பினர் (ஊழியர்) மற்றைய தரப்பினர் (தொழில்தருநருக்கு) தனது உழைப்பை வழங்குவதற்கான உடன்பாடாகவே இது கருதப்படுகிறது.நாட்டின் சட்டமுறை விதிகள், சேவை உடன்படிக்கைகளின் அமுலாக்கம்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சேவையில் ஈடுபடுத்தப்படும் நிபந்தனைகளுக்கும், கட்டளைகளுக்கும் ஏற்ப விசேட சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேற்படி கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக, அரசியல் அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.சில சந்தர்ப்பங்களில் சட்டரீதியான எல்லைகள் ஊழியரின் விருப்புக்கு அமைந்திருந்தாலும், தொழில்தருநர் அவற்றைக் கைவிட முடியாது.
பின்வரும் விடயங்கள் தொடர்பாக சேவை உடன்படிக்கையின் நிபந்தனைகளை மீறி அரசியலமைப்பு – சட்ட ஏற்பாடுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டங்கள் மூலம் கட்டாயமான விடயங்கள்.
பணிக்கொடை
ஊழியர் விபத்துக்கான நட்டஈடு
சேவையை முடிவுறுத்துதல், சேவையில் இருந்து விலகுதல், மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுதல், ஊழியர் நட்டஈடு போன்ற விடயங்கள்
ஆகக் குறைந்த சம்பளமும், மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவும்
விடுமுறையும் ஓய்வும்
சுகாதாரம் மற்றும் நலன்புரிக் கொடுப்பனவுகள்
தாய்மைக்குரிய நன்மைகளும் வைத்திய வசதிகளும்
அதேசமயம் மேற்கூறிய அரசிலமைப்பு ரீதியான விடயங்களின் கீழ் தொழில்தருநர் - ஊழியர் கூட்டு ஒப்பந்தங்களின் ஏற்பாடுகளும், தொழில் நீதிமன்றங்களினதும், கைத்தொழில் நடுத்தீர்ப்பு செயற்பாட்டின்மூலம் வழங்கப்படும் கட்டளைகளும் ஊழியர்களின் தனிப்பட்ட சேவை உடன்படிக்கையின் நிபந்தனைகளாக மாறியுள்ளதும். அதன் காரணமாக உருவாகி உள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு தொழில்தருநர்கள் கடப்பாடு கொண்டவர்கள்.
அத்துடன் பெருந்தோட்டத்துறை சார் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்,போக்குவரத்து,சுகாதாரம் போன்றவற்றில் தோட்ட கம்பனிகள் கூடுதல் பொறுப்புடையவர்கள்.அதற்காக முதலாளிகள் சம்பளத்தை சாராத வகையில் கொடுப்பனவுகள்/சலுகைகள் வழங்குதல் வேண்டும்.
இன்றைய கேள்வி பதில் (02-09-2016)
Reviewed by NEWMANNAR
on
September 02, 2016
Rating:

No comments:
Post a Comment