குழந்தைகளின் ஆற்றலை அழிவுக்குள்ளாக்கும் திரைக்காட்சிகள்
ஆறறிவு படைத்த மனிதன் அறிவியல் கொண்டு படைத்த சாதனங்கள், மனித செயற்பாடுகளை விரைவாக்க உதவுகின்றன என்று கூறினால், அது மிகையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், பல நாட்கள், அல்லாவிடின் பல மாதங்கள் எடுத்த பணிகள் தற்போது மிகக் குறுகிய காலப்பகுதியில் நிறைவுறுத்தப்படுவதைக் காணலாம். அபிவிருத்திப் பணிகளான வீதிகள் மற்றும் பாலங்கள் அமைத்தல். கட்டடங்கள் அமைத்தல், என்பவற்றினை அவதானிக்கையில் இவ்விடயம் எளிதில் புலனாகும். இதுமட்டுமல்லாமல், அலுவலகங்களிலும் கணினிகள் மற்றும் அவற்றிற்கிடையிலான வலையமைப்புக்கள் என்பன, அலுவலகப் பணிகளை இலகுவில் ஆற்றத் துணைபுரிகின்றன.
இதேவேளை, பொழுதுபோக்குச் சாதனங்களும் அறிவியல் ஆய்வுகளால் படைக்கப்பட்டு, படிப்படியாக அவை மனிதனின் விருப்புகளுக்கேற்ப மெருகேற்றப்பட்டு வருகின்றன. துல்லியமான காட்சிகளைத் தரும் தொலைக்காட்சிச் சாதனம் மட்டுமல்லாமல், கணினி மற்றும் சிறப்புக் கைத்தொலைபேசிகளும் பொழுதுபோக்குச் சாதனங்களாக உருவெடுத்து, மனிதனின் நேரத்தினை வீணடிக்கும் சாதனங்களாகவும் சிலவேளைகளில் மாறிவிடுகின்றன.
எமது கரங்களில் தவழும் அநேகமான கையடக்க சாதனங்கள் தற்போது தொடுதிரைச் சிறப்பியல்பினைப் பெற்றவையாகக் காணப்படுகின்றன இச்சாதனங்களைக் கையாள்வதில் பெரியோரைப் பார்க்கிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கில்லாடிகளாகத் திகழ்கின்றனர். இவை தொடர்பில் இளந்தலைமுறையின் சுட்டித்தனத்தினை அவதானிக்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு தொடுதிரை கொண்ட இலத்திரனியல் சாதனங்களைப் பரிசளித்துவிடுகின்றனர். அவற்றினை உபயோகிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், குனிந்த தலை நிமிராமல், நேரம்போவதே தெரியாமல், அவற்றுடன் நேரத்தினைச் செலவழிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களை நேரக்கட்டுப்பாடின்றி இச்சாதனங்களை உபயோகிக்க அனுமதிப்பது நல்லதல்ல என குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய கையடக்க இலத்திரனியல் சாதனங்கள் தற்போதே இங்கு பலரின் கைகளிலும் தவழ ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் இச்சாதனங்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரின் கரங்களிலும் ஏலவே உபயோகத்தில் உள்ளன. இச்சாதனங்களின் புதிய பதிப்புக்களை வைத்திருப்பது சமுதாயத்தில் மதிப்பினை ஏற்படுத்தும் என எண்ணுமளவிற்கு இச்சாதனங்கள் மீதான மோகம் அங்கு காணப்படுகின்றது. இச்சாதனங்களைத் தொடர்ந்து உபயோகிப்பதால் அமெரிக்க இளைய தலைமுறையில் ஏற்படும் பாதிப்பினை அவதானித்த குழந்தை நல மருத்துவர்கள் இச்சாதனங்கள் தொடர்பிலான நேரக் கட்டுப்பாட்டினைப் பரிந்துரைத்துள்ளனர். அண்மையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்ற அமெரிக்க குழந்தை நல மருத்துவர்களின் மாநாட்டில் இப்பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பரிந்துரைகள் குழந்தைகளின் வயது அடிப்படையில் வகுத்து வழங்கப்பட்டுள்ளன.
18 மாதங்கள் மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட வயதினையுடைய குழந்தைகள்
இந்த வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து தவிர்க்கப்படவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தொலைக்காட்சியினைப் பார்வையிட்டவாறு தாயொருவர் தன் குழந்தையைப் பராமரித்துக்கொண்டிருந்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து வரும் ஒளி மற்றும் சத்தம் என்பவற்றால் குழந்தை மிகையாகத் தூண்டப்படும் சாத்தியம் உள்ளதாக அமெரிக்க மருத்துவர் சாசியாகோஸ் தெரிவிக்கின்றார். இது குழந்தையில் அமைதியின்மை மற்றும் நித்திரைக் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் என அவர் கூறுகின்றார். தாயொருவர் குழந்தைக்குப் பாலூட்டுகையில், அக்குழந்தையுடன் கண்தொடுகையில் (குழந்தையின் கண்ணை தாய் நோக்குதல்) இருந்தால் அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இரண்டு வயது தொடக்கம் 5 வயதுள்ள சிறுவர்கள்
இந்த வயதுள்ள சிறுவர்களுக்கு திரைக்காட்சிகள் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே அனுமதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையம் வழியேயான காட்சிகள், இவ்வயதுச் சிறுவர்களின் நுகர்வுப் பண்பினை அதிகரித்து, ஆக்கத்திறனைச் சிதறடித்துவிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள சிறுவர்கள் எவ்வகையான காட்சிகளைப் பார்க்கிறார்கள் என்பது மட்டில் பெற்றோர் அக்கறையுடன் இருக்க வேண்டும் என குழந்தை நல மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களிடையேயான போட்டிகள் மற்றும் கட்டுப்பாடில்லாத இணையச் சுதந்திரம் என்பன குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஒவ்வாத காட்சிகளை வீடு வரை வந்து சேர்வதற்கு வழிவகுக்கின்றன. நல்லது எது கெட்டது எது எனப் பகுத்து அறிய முடியாத சிறுவர் சிறுமியர்கள் தீயவற்றின் பால் இலகுவில் கவரப்பட்டுவிடக்கூடும் என்பதே சமூக ஆர்வலர்களின் அச்சமாகக் காணப்படுகின்றது.
புதிய இலத்திரனியல் சாதனங்களைக் கையாள்கையில் அது தரும் காட்சிகளை நுகர்ந்து, மெய்மறந்து போகாது, இக்கருவி நுட்பமாக இயங்குவதற்கான அறிவியல் பின்னணி என்ன என இளைய தலைமுறையினர் சிந்திப்பார்களேயானால், வியக்கத்தக்க படைப்புக்களை அவர்களாலும் உருவாக்க இயலும். எனவே, தொலைக்காட்சி மற்றும் திரைக்காட்சிகளில் நேரத்தினை அதிகம் வீணடிக்காது, கற்றலில் தமது நேரத்தினைச் செலவிட்டால், புதிய நோக்கிலான சாதனங்களைப் படைப்பதற்கான இயலுமை எம் இளையவர்களிலும் உருவாகும்.
குழந்தைகளின் ஆற்றலை அழிவுக்குள்ளாக்கும் திரைக்காட்சிகள்
Reviewed by NEWMANNAR
on
October 31, 2016
Rating:

No comments:
Post a Comment