மங்களராமய விகாரை தலைமை பிக்குவை உடனடியாக கைது செய்க ; கிழக்கு முதலமைச்சர்
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் அனைத்துக்கட்சிகளும் அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களும் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துவரும் நிலையில் அங்கு இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போது இடமளிக்க முடியாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருதில் நேற்று இரவு இடம்பெற்ற பொதுக் கூட்டத்திலேய கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.
கிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், பிக்கு ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதை மதிக்காமல் செயற்பட முனைவதும் நாட்டின் நீதிக்கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தும் விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது வழக்கு தொடரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்த அரச ஊழியர் ஒருவரை பிக்கு அச்சுறுத்துகின்றார் என்றால் அவர் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.
இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் இல்லை. தேரராக இருந்தாலும் ஐயராக இருந்தாலும் பாதிரியாராக இருந்தாலும் மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்இ
ஆகவே நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் பிக்குவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அத்துடன் பிக்குவின் செயற்பாடுகளை தடுக்காது வாய்மூடி மௌனமாக நின்ற பொலிஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதனால் சிறுபான்மை மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கி அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி சமூகங்களிடையே மீண்டும் மோதலை ஏற்படுத்த முற்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இனவாதம் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அது மாத்திரமன்றி பௌத்த பிக்கு ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது பௌத்தர்கள் தொடர்பில் தவறான புரிதலை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்தும்.
எனவே ஜனாதிபதியும் பிரதமரும் தேரர் மாத்தரமன்றி இனவாதத்தைப் பேசுவோர் அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மங்களராமய விகாரை தலைமை பிக்குவை உடனடியாக கைது செய்க ; கிழக்கு முதலமைச்சர்
Reviewed by NEWMANNAR
on
November 15, 2016
Rating:

No comments:
Post a Comment