இராஜதந்திர போராட்டம் நடைபெறுகின்றது..! அதிகாரங்கள் எமது கைகளுக்கு வர வேண்டும் - சம்பந்தன்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வினையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகையின் விடியல் வீச்சு மலர் வெளியீட்டு நிகழ்வு யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
சர்வதேச பங்களிப்புடன் இராஜதந்திர போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. நாட்டின் ஆட்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதையும் பொருத்தவரையில் சர்வாதிகாரம் நிகழ்ந்தது. நாடு சர்வாதிகார போக்கில் போய்க்கொண்டிருந்தது. ஆட்சியாளர்கள் தாம் விரும்பியவாறு அரசியல் அமைப்பினை மாற்றி அமைக்கும் பயங்கரமான நிலமை ஏற்பட்டது.
அந்த பயங்கரவாத நிலையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டது. அவ்வாறான மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பங்களிப்பினைச் செய்தார்கள்.
இன்று எம்மைப் பொறுத்தவரையில் சரியான முறையில் அனைத்து கருமங்களிலும் திருப்தியடையவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறையில் வாடும் அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு, இராணுவ குடியேற்றங்கள், புனர்வாழ்வுகள் இராணுவ மயமாக்கல்கள் போன்றவற்றினைப் பொருத்தவரையில் பாரிய குறைபாடுகள் நிலவி வருகின்றன.
அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். எதுவும் நடைபெறவில்லை என கூற முடியாது. பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறவில்லை. அரசியல் சாசனத்தினைப் பொறுத்தவரையில், பல அரசியல் சாசனங்கள் மக்களின் அபிலாசைகளுடன் நிறைவேற்றப்படவில்லை.
ஐ.தே.க கட்சியினர் தாம் விரும்பியவாறு ஒரு அரசியல் சாசனத்தினை நிறைவேற்றினார்கள். அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழர்கள் உட்பட வேறு எவரும் பங்கேற்கவில்லை.
அரசியல் சாசனம் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டமையினால் நாட்டின் ஆட்சியில் பெரும் குறையாக இருந்து வந்துள்ளது.
சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பொருத்தவரையில் ஒரு நாட்டினை ஆட்சி செய்வதற்கு ஜனநாயக ரீதியாக அடிப்படை அஸ்திவாரம் அந்த நாட்டில் உள்ள மக்களின் அபிலாசைகளைப் பெறுவது அடிப்படைத் தேவை.
தமிழ் மக்களின் ஜனநாயக முடிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் இந்த நாட்டில் எமது சம்மதம் இன்றி ஆளப்படுகின்றோம். சர்வதேச மனித உரிமைகள் சாசனத்திற்கு மாறான ஒரு செயல். ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள் சிவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களிற்கு அரசு ஒரு பங்காளி.
மக்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு நாம் வெளியக சுயநிர்ணய உரிமையை கேட்கவில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. அது எமக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசன முறை முக்கியத்துவம் பெறுகின்றது. அவை சர்வதேச மனித உரிமை பிரகடனத்திற்கு அமைவாக அமைய வேண்டியது அவசியமாகும்.
தற்போது முக்கிய தருணத்தில் இருக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்துகளுடன் அரசியல் சாசனம் அமைய வேண்டுமென்ற நிலைமை தற்போது எழுந்துள்ளது.
மக்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய தீர்வாக இருந்தால் அதற்கு ஆதரவு அளிக்கும் நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். உண்மைகள் அறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் சமத்துவம் ஏற்பட வேண்டுமாயின் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும். அனைத்து மக்களின் இறைமையும் மதிக்கப்பட வேண்டும். தமது பிரதேசத்தில் ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட வேண்டும். மக்களின் இறைமையின் அடிப்படையில் ஆட்சி நடைபெறலாம்.
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வினையும் நாங்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது உறுதி. ஆனால் எமக்குத் தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் ஒரு தீர்வில் ஏற்படுமாக இருந்தால் அதை இழக்கப் போவதில்லை. அதிகாரம் எமது கையில் வரவேண்டியது அத்தியாவசியம்.
நிர்வாக அதிகாரம் உள்ளிட்ட பல அதிகாரங்கள் எமது கைகளுக்கு வர வேண்டும். அந்த சந்தர்ப்பத்தினை இழக்காது அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இராஜதந்திர போராட்டம் நடைபெறுகின்றது..! அதிகாரங்கள் எமது கைகளுக்கு வர வேண்டும் - சம்பந்தன்
Reviewed by Author
on
November 06, 2016
Rating:

No comments:
Post a Comment