வவுனியா கற்பகபுரத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.கற்பகபுரத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற இந்து சமய விவகார அமைச்சர் ரி.எம். சுவாமிநாதன் கலந்து கொண்டு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
கற்பகபுரம் கிராமத்தில் குடியிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இந்திய மற்றும் அயல் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்திருந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மீள்குடியேறியிருந்தனர். அவர்களது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையிலேயே அவர்கள் தமது காணிகளில் குடியேறியிருந்ததுடன், காணியற்ற மக்களுக்கும் அப்பகுதியில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரி வந்த நிலையில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது இப்பகுதி மக்கள் தமது கிராமத்திற்கான வீட்டுத்திட்டம் உள்ளக வீதி புனரமைப்பு, பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகமது, வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் அப்துல்பாரி, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் கருணாதாச, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறிரெலோ கட்சியின் இணைப்பாளர் ஜனகன், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா கற்பகபுரத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு
Reviewed by Author
on
December 29, 2016
Rating:

No comments:
Post a Comment