வல்லரசுகளிடையே தணிகிறது பகைமை
ஒபாமா எட்டு வருடங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்கா இனவெறியிலிருந்து முழுவதும் விடுதலை அடையும் நாட்கள் நெருங்கி விட்டன என்று பலரும் நம்பினார்கள்.
ஆனால், “கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்பதால் இனவெறி மாயமாக மறைந்து விடும் என்று நினைக்கக் கூடாது” என்று ஒபாமா சொன்னார்.
அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது ட்ரம்பை வெள்ளைப் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுத்ததில் தெளிவாகத் தெரியவந்தது.
அமெரிக்காவின் வெள்ளைத் தன்மையை வெளியிலிருந்து கூட்டம் கூட்டமாக நுழைந்து கொண்டிருக்கும் இந்தியர்களும் சீனர்களும் மெக்சிகர்களும் மாற்றி விடுவார்கள் என்ற அச்சமும் ஹிலாரி தோற்றதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.
ஒபாமா சிக்காகோ நகரத்தில் நிகழ்த்திய தனது கடைசி உரையை மிகுந்த நம்பிக்கையோடு முடித்தார்.
அமெரிக்க இளைஞர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அமெரிக்கா எல்லோரையும் அணைத்துக் கொண்டு வித்தியாசமே இல்லாமல் நடத்தும் என்பதிலும் அவர் ஐயம் இல்லாமல் இருக்கிறார்.
ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரத்தை விட, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது மற்றைய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைத்தான்.
ஒபாமாவின் ஆட்சி, அமெரிக்காவின் அசாதாரணமான வலிமை இறங்குமுகத்தில் இருக்கும் வரலாற்றுத் தருணத்தில் நடைபெற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ரஷ்யாவும் சீனாவும் பிடிக்குள் வராமல் திமிறிக் கொண்டிருந்தன.ஐரோப்பிய நாடுகள் திரும்பவும் தேசியப் பாதையில் செல்லலாமா என்று யோசிப்பில் இருந்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுப் போர். ஈரான் அது நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிடி நழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய ஒபாமா முயன்றார்.
சில இடங்களில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வெற்றி கண்டது. கியூபா, ஈரான் போன்ற நாடுகளோடு அமெரிக்காவின் உறவு வலுவடைந்தது.
ஆனால் தனது வெளிநாட்டுக் கொள்கையைக் குண்டுகளின் மூலமும் கைமுறுக்கல்கள் மூலமும் பரப்ப அமெரிக்கா ஒபாமா காலத்தில் தொடர்ந்து முயன்றிருக்கிறது.
2016- ல் 25,000ற்கும் மேற்பட்ட குண்டுகளை மற்றைய நாடுகள் மீது (குறிப்பாக ஈராக், சிரியா) பொழிந்திருக்கிறது.
ஒபாமா ஆட்சியில்தான் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு ஆட்டம் கண்டது.
ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் கறுப்பினத்தவர் மட்டும் அன்றி, ஹிஸ்பானிக் என்று அழைக்கப்படும் மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்காவிலிருந்து இங்கு குடியேறியவர்களுக்கும் உலகமே முடிவடையப் போகிறதோ என்ற அச்சம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
தனது முதல் சந்திப்பிலேயே பத்திரிகையாளர்களை, குறிப்பாக சி.என்.என் தொலைக்காட்சியினரை ஒரு பிடிபிடித்தார் ட்ரம்ப்.
அடுத்த நான்கு வருடங்களில் பல வாண வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பனவற்றில் நம்மைப் பொறுத்த வரையில் முக்கியமானவை இவை: -
முதலாவதாக, மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக எல்லை கடப்பதைத் தடுக்கத் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும். சுவர் எழுப்புவதற்குத் தேவையான பணம் மெக்சிகோவிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று ட்ரம்ப் சொல்கிறார். எப்படி வசூலிக்கப்படும் என்பதைப் பற்றிச் சொல்லவில்லை. ஏழை நாடு என்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மெத்தனமாக இருக்கலாம். மற்றைய வலுவில்லாத நாடுகளை அவர் எப்படி நடத்துவார் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம்.
இரண்டாவதாக, ரஷ்யா ஹேக்கிங் தாக்குதல் நடத்தியது என்று உளவுத்துறை கூறுவதை ட்ரம்ப் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. இதே உளவுத்துறைதான் சதாம் ஹுசைன் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று சொல்லிக் கொண்டிருந்ததுஎன்று அவர் சுட்டிக் காட்டினார்.எனவே ரஷ்யாவுடன் நிலைமையைச் சீர்ப்படுத்த அவர் முயல்வார் என்பதில் ஐயம் இல்லை. ஐரோப்பிய நாடுகள் இந்த முயற்சியை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், உலகின் இரு வலுவான நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் தற்காலிகமாகக் குறைந்து விட்டது என்று சொல்லலாம். பெற்றோலியப் பொருட்களின் விலை ஆகாயத்தைத் தொடும் வாய்ப்பும் குறைந்து விட்டது.
மூன்றாவதாக, சீனாவுடன் அமெரிக்காவின் உறவு சீராகும் என்று சொல்ல முடியாது. அமெரிக்க வேலைகள் சீனாவுக்குச் சென்று கொண்டிருப்ப தாக அவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க முதலாளிகளுக்கும் அவருக்கும் இடையே இது குறித்து உரசல்களை எதிர்பார்க்கலாம்.
நான்காவதாக, அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் ஃப்ளின். இவரும் ரஷ்யாவுடன் நல்லுறவை விரும்புபவர். தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்பாளர். இவரும் ட்ரம்பும் ஒன்றுசேர்வது இஸ்லாமிய நாடுகளுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை நசுக்கும் நடவடிக்கைகள் முடுக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ட்ரம்ப் இந்தியாவைப் பற்றிப் பொருட்படுத்தக் கூடிய அளவில் இதுவரையில் எதுவும் சொல்லவில்லை. எதிர்காலத்தில் இந்தியாவை எவ்வாறு எதிர்கொள்வார் என்பது பற்றி சரியான புரிதல் இன்னும் யாருக்கும் இல்லை.
வல்லரசுகளிடையே தணிகிறது பகைமை
Reviewed by Author
on
January 24, 2017
Rating:

No comments:
Post a Comment