வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள கோவில் நிலங்களை அளவிடுங்கள் - சம்பிக்க....
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர் அங்கு பல மடங்குகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ள கோவில்கள் மற்றும் இஸ்லாமிய மதத் தலங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன் கோவில் அண்மையில் 5 மடங்குகள் அதிகரிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பில் எவரும் இதுவரை வாய்திறக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய விசேட நேர்காணலின்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
“நாட்டில் சுமார் மூன்று இலட்சம் தொல்பொருள் இடங்கள் உள்ளதோடு இதில் பாதுகாக்கப்பட வேண்டிய 12 ஆயிரம் இடங்கள் காணப்படுகின்றன. தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஆளணி மிகவும் அந்த கதியில் இயங்குகின்றது. அதன் காரணமாக தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளன.
உதாரணமாக பிரித்தானியரின் ஆட்சியின்போது டேவி என்பவர்; வெளியிட்ட நினைவுகள் என்ற நூலில் ருவன்வெலிசாய தூபி ஒரு பாரிய மலையைப் போன்றே காட்சியளித்ததாக கூறியுள்ளார். எமக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து அபேகிரிய தொல்பொருட் சின்னமும் பற்றையினால் சூழப்பட்ட மலையைப் போன்றே காட்சியளிக்கிறது. அதேபோல வடக்கு, கிழக்கு பகுதிகளில் காடுமண்டிய மலையைப் போன்று பல்வேறு இடங்களில் தூபிகள் காணப்படுகின்றன.
இதுகுறித்து தெரியாதவர்கள் அதன் மீது விவசாயத்தையும், வீடு கட்டுதலையும் செய்கின்றனர். அந்த நடவடிக்கைகளில் புராதன சின்னங்களின் கற்கள் தென்பட்டால் அதனை யாரிடமும் கூறாமல் இரகசியமாக அகற்றுகின்றனர். எனவே மதத் தலங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மாணித்துள்ளனர். உதாரணமாக திருகோணமலை இருந்ததைப் பார்க்கிலும் 5 மடங்கு அதிகமாக விஸ்தரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளனது.
அதேபோன்று புதிய கோவில்களும், கிறிஸ்தவ, இஸ்;லாமிய மதத் தலங்களும் மட்டக்களப்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. எனவே 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையிலும், யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மதத் தலங்கள் மற்றும் அதன் விஸ்தரிப்பு தொடர்பாக கணக்கெடுப்பை மதவிவார அமைச்சுக்கள் நடத்தி போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – என்றார்.
இதேவேளை மாகாண சபை முறைமையை தோற்கடிப்பதற்கு இணங்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது குற்றம் சுமத்தினார்.
“2013ஆம் ஆண்டில் வடமாகாண சபையை அமைப்பதற்கு முன்னர் மாகாண சபை முறையை மாற்றியமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் தான்தோன்றித் தனமாக புறக்கணித்தார். நாங்கள் மட்டுமல்ல, இன்று மஹிந்த ராஜபக்சவுடன் கைகோத்திருக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும் இந்த விடயத்தில் குற்றவாளிகள்தான். மாகாண சபையை மாற்றியமைக்கும் சுவர்ணமயமான சந்தர்ப்பத்தை அன்று நாங்கள் நழுவவிட்டதன் விளைவாக வடக்கு மக்களை மீண்டும் இனவாதத்திற்கு இட்டுச் செல்லும் இனவாதியான விக்கேஸ்வரனைப் போன்ற ஒருவர் தெரிவாவதற்கு காரணமாகிவிட்டோம். இதற்கு மஹிந்த ராஜபக்சவும், விசேடமாக பெசில் ராஜபக்சவும் பொறுப்பு கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள கோவில் நிலங்களை அளவிடுங்கள் - சம்பிக்க....
Reviewed by Author
on
January 01, 2017
Rating:

No comments:
Post a Comment