ஒரு நாடாக நாம் ஒன்றிணைவோம்! மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்....
நாட்டு மக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்து செல்வதாக தெரிவித்துள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், புதுவருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை நேற்றுமுன்தினம் ஆறாம் நாளாகவும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண் டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின் தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எங்களுடைய பல மக்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்கக்கூடாது. எம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்கான சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இக்குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும்.
உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் எம்முடைய இச்சிறு தேசத்தை உலகிற்கு அறியப்படுத்துவதற்கு பெரிதும் துணைபுரிந்துள்ளது. இலங்கை மக்கள் அனைத்து மத கொண்டாட்டங்களையும் பொதுவாக கொண்டாடுவார்கள் என்பதை நாம் அறிவோம். வெசாக் கொண்டாட்டம் சிங்கள தமிழ் புத்தாண்டு முஸ்லிம்களின் திருநாள்கள் என அனைத்து திருநாள்களையும் இலங்கையர்கள் கொண்டாடுகின்றார்கள்.
இச்செயற்பாட்டின் மூலம் எம் மக்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமை வெளிப்படுகின்றது. எங்களுடைய சமய கலாசார மொழியின் தனித்தன்மையை நிலைநாட்டியவாறு ஒரு இனமாக வாழ்வதற்கான தேவை இதன் மூலம் வெளிப்படுகின்றது என சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஒரு நாடாக நாம் ஒன்றிணைவோம்! மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்....
Reviewed by Author
on
January 01, 2017
Rating:

No comments:
Post a Comment