கேப்பாப்பிலவு விவகாரம் 2 தினங்களில் உரிய தீர்வு...
கேப்பாப்பிலவு காணி விடயத்தில் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் உரிய பதில் கிடைக்கும் என்று அர சாங்கம் அறிவித்துள்ளது.முல்லைத்தீவு-கேப்பாப்பிலவில் உள்ள தங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மூன்று வாரங்களாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், நேற்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நியாயமான கோரிக்கைக்கு பதில் வழங்க வேண்டும் என்று அவர் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் கோரினார்.
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை உரியத் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்படி எதிர்வரும் ஓரிரு தினங்களில் கிரமமான பதில் ஒன்று வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்தார்.
இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த பிரேரணையை முன்னிட்டு, மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளை இணைத்து கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் இந்த பிரேரணை ஊடாக இணங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்து உரையாற்றினார்.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில், மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த அறிக்கையில் மாத்திரமே சர்வதேச நீதிபதிகள் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாறாக பிரேரணையில் அவ்வாறான எந்த விடயமும் இல்லை என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கும் சாத்தியம் இலங்கையில் நடைமுறையில் உள்ள யாப்பில் இல்லை என்பதால், அதனை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் உறுதியளித்தார்.
அதேநேரம், கடந்த காலங்களில் மகிந்த அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொது செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மர்சூசிக்கி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழுவுடன் தொடர்புகளை பேணி வந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
நியூயோர்க் சென்ற மகிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதிகள், தருஸ்மனிடம் பலவிடயங்களை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்ததுடன், அது தொடர்பான ஆவணப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.
இவ்வாறு பரிமாற்றிக் கொள்ளப்பட்ட ஆவணங்களை தாம் சபையில் முன்வைக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கேப்பாப்பிலவு விவகாரம் 2 தினங்களில் உரிய தீர்வு...
Reviewed by Author
on
March 23, 2017
Rating:

No comments:
Post a Comment