பட்டதாரிகளுடன் பெற்றோர்களும் இணைந்து போராட்டம்....
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 28வது நாளாக தொடர்ந்து காரைதீவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் களத்தில் இருக்கும் தமது பிள்ளைகளுக்காக பெற்றோர்களும் தமது ஆதரவைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பட்டதாரிகளுக்கான சமையல் பணியிலும் ஈடுபட்டதைக்காணமுடிந்தது. நேற்றைய தினம் சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த பட்டதாரிகளின் பெற்றோர்கள் அதில் இணைந்துகொண்டனர்.
இனிவரும் தினங்களில் ஊர்ஊராய் பெற்றோர்கள் இணைந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளனர் என அங்கு தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நாளை 28ஆம் திகதி செவ்வாயன்று வடக்கு கிழக்கிற்கு விஜயம்செய்து பட்டதாரிகளைச் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இச்ந்திப்பினூடாக இப்பிரச்சினை தீர்க்கப்படலாமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கடந்த 23ஆம் திகதி வியாழனன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த விசேட பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணைக்குக் கிடைத்த பிரதிபலனாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின்பேரில் பொருளாதாரநிபுணர் மாரசிங்க எம்.பி தலைமையிலான அமைச்சர் எம்பிக்கள் நிபுணர்கள் உள்ளடங்கியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த குழுவில் முதலில் கரைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
முதலில் அம்பாறை மாவட்டத்திற்கும் பின்னர் மட்டு. திருமலை மாவட்டங்களுக்கும் குழுவினர் விஜயம் செய்வர். அதன்பின்னர் வடபகுதிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் பட்டதாரிகளின் வேலையில்லாப்பிரச்சினை விடயத்தினை விரிவாக ஆராய்ந்து தொழில்வாய்ப்பு வழங்குவது தொடக்கம் பயிற்சி சுயதொழில் உதவி மற்றும் பல தொழிலுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை செய்யும். அதன்படி பட்டதாரிகளுக்கான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என கூறப்படுகின்றது.
காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே மூவின பட்டதாரிகளும் தொடர்ந்து 28 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையனெ அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனினும் நிரந்தரமான தீர்வுகிட்டும் வரை நாம் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லையெனவும் அவர்கள் கூறினர்.
பட்டதாரிகளுடன் பெற்றோர்களும் இணைந்து போராட்டம்....
 
        Reviewed by Author
        on 
        
March 27, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 27, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment