65000 வீடுகள் 6 ஆயிரமாக மாறியது எப்படி..? ஒற்றைக்காலில் நிற்கும் அரசியல் வாதிகள்
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சில திட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் சில சில அபிவிருத்திகளை செய்திருந்தாலும் அத்தியாவசியமாக கருதப்படும் உறையுள் இல்லாமல் தினம் தினம் அல்லல்படுகின்றார்கள் மக்கள்.
அதன்படி மக்கள் தமது காணிகளை பெற்றுக்கொள்வதற்காக உணவுகள் இல்லாமல் தமது பிள்ளைகளுடன் நடுவீதியில் போராட்டம் நடத்தி வருவது ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
அது ஒருபுறம் நடந்துகொண்டு இருக்க மறுபுறம் யுத்தத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்காமல் 8 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழ் தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொடுத்த வாக்குறுதிக்கமைவாக உரிய வீடுகளை அமைத்து கொடுக்க இந்த அரசாங்கம் தற்போது சில நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதன்படி கடந்த வருடம் மக்களுக்கு 65000 பொருத்து வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றினை கொண்டு வந்தது.
மீள்குடியேற்ற அமைச்சு, குறிப்பாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு, தமிழ் மக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் , தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் பயங்கர எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
அப்படி இந்த பிரச்சினையானது பல மாதங்களாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் அந்த பேச்சு மழுங்கடிக்கப்பட்டு, அந்த செயற்திட்டம் நடைபெறுமா என்ற கேள்வி அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் எழுந்த நிலையில் மறுபடியும் துளிர்விட்டுக்கொள்ளும் நிலைமையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக தற்போது உருக்கினை பயன்படுத்தி குறித்த பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பொருளாதார முகாமைத்துவத்திற்கான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இன்றும் கூட அமைச்சரவை அனுமதியினை பெற்றபாடில்லை.
ஆனால் இதில் தான் புதிய சிக்கல் காணப்படுகின்றது, குறிப்பாக அன்று 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதாக தெரிவித்திருந்தது அமைச்சு.
ஆனால் தற்போது 6000 வீடுகளுக்கு மட்டுமே உருக்கினை பயன்படுத்தி அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே வடக்கு கிழக்கு மக்கள் மற்றும் தமிழ் அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் அமைச்சருக்கு எதிர்ப்பினை தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் காலநிலையினை கருத்திற்கொண்டு இந்த திட்டமானது பொருத்தமற்றது என தெரிவிக்கப்படுகின்றதுடன், சாதாரண வீடுகளை விட அதிக செலவு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்தோடு இதனை நிர்மாணிக்கும் போது அங்கு இருக்கும் தொழிலார்கள், குறிப்பாக சாதாரண கல்வீடுகளை அமைக்கும் மேசன் போன்ற தொழிலார்கள் தங்கள் வேலைகளை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
இருந்தாலும் இதை பொருட்படுத்தாமல் இந்த அரசாங்கத்தில் இருக்கும் பல அரசியல் வாதிகள் இதனை அமைத்து தான் தீருவோம் என ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள்.
இவ்வாறு முழுமுயற்சியுடன் அவர்கள் செயற்படுவதற்கான காரணம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணிகள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும் பொதுமக்கள் தற்போது முகாம்களிலும், நலன்புரி நிலையங்களிலும் பல இன்னல்களுடன் வாழ்ந்து வருவதால் ஒரு சமையம் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும், அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Vino அவர்களால் வழங்கப்பட்டு 03 Apr 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Vino என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
65000 வீடுகள் 6 ஆயிரமாக மாறியது எப்படி..? ஒற்றைக்காலில் நிற்கும் அரசியல் வாதிகள்
Reviewed by Author
on
April 04, 2017
Rating:

No comments:
Post a Comment