சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதி நிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம்,மறிச்சிக்கட்டி கிராம மக்களை நேரில் சென்று சந்திப்பு-(படம்)
முசலி பிரதேசத்தில் நில மீட்பு போராட்டத்தில் தொமர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய கிராம மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை நேரில் சென்று கலந்துரையாடியுள்ளனர்.
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
குறித்த மக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற நில மீட்பு போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் குறித்த மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்டு அம்மக்களுடன் கலந்துரையாடுவதற் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி' உள்ளிட்ட குழுவினர் முள்ளிக்குளம் பகுதிக்கு வருகை தந்தனர்.
வருகை தந்த குறித்த குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுடனும், அருட்தந்தையர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இதன் போது முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக நிலம் பலவந்தமாக அபகரிக்கப்பட்டமை குறித்தும்,தற்போது முள்ளிக்குளம் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினரிடம் தெரிவித்தனர்.
மேலும் தமது நிலம் மீட்கப்படும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என அந்த மக்கள் தெரிவித்தனர்.
இதே வேளை குறித்த முள்ளிக்குளம் மக்களின் நில போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பான பாராளுமன்ற உறுப்பினர்,மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை முள்ளிக்குளம் சென்றிருந்தனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.கணசீலன், எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், டெலோ மாவட்ட அமைப்பாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வருகை தந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் சயில் செட்டி,,,,
முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது நிலம் மீட்பிற்காக நீண்ட நாற்கலாக போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அறிந்தோம்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்திப்பதற்காக இன்றைய தினம் சர்வதேச மன்னிப்புச் சபையின் சார்பாக நாங்கள் இங்கு வந்தோம்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதாக முறைப்பாடு கிடைக்கின்றது.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது நிலங்களை இழந்து தவிக்கின்றனர்.குறித்த மக்களின் போராட்டம் முக்கியமானது.நாங்கள் பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளோம்.இதன் போது குறித்த மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
-அதனைத்தொடர்ந்து முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி சக்கியா பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் இன்று திங்கட்கிழமை 7 ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மக்களையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் 'சயில் செட்டி' உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று சந்தித்து அந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
இதன் போது அந்த மக்கள் தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தலட மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,குறித்த பகுதியில் உள்ள காணிகள் தம்முடையது உனவும்,குறித்த காணிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் தங்களிடம் இருப்பதாகவும்,அவற்றையும் குறித்த பிரதிநிதிகளிடம் காண்பித்துள்ளனர்.
எனவே முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினைகள் போன்று தமது பிரச்சினைக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை உறிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என மறிச்சிக்கட்டியில் 7 ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற முஸ்ஸீம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதி நிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம்,மறிச்சிக்கட்டி கிராம மக்களை நேரில் சென்று சந்திப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 03, 2017
Rating:

No comments:
Post a Comment