புரட்டிபோடும் ‘மோரா’ புயல்... பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25ஆம் திகதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் சுமார் 5 இலட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பலரின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியிலும், நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இலங்கை முப்படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இந்த பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. எனினும் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (மோரா) உருவாகி இருப்பதால், அங்கு மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட சீனா முன்வந்துள்ளது.
22 இலட்சம் டாலர் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசு அறிவித்து உள்ளது.
இதற்கிடையே நிவாரண பொருட்கள் மற்றும் மீட்புக்குழுவினரை ஏற்றிச்சென்ற இந்தியாவின் 2வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.ஷர்துல், நேற்று முன்தினம் கொழும்பு வந்திருந்தது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறி வருகிறது. ‘மோரா’ எனப் பயரிடப்பட்ட இந்தப் புயல் மேற்குவங்கத்துக்குத் தென்கிழக்குக் கடலில் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயலால் வங்கதேசம், ஒடிசா, அருணாச்சல்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்யும். வங்கக்கடலைக் கடக்கும் இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வானிலையில் எவ்வித மாற்றமுமின்றி தமிழகத்தில் வெப்பம் தொடர்ந்து நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்து போவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக்கரையிலுள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
புரட்டிபோடும் ‘மோரா’ புயல்... பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு!
Reviewed by Author
on
May 30, 2017
Rating:

No comments:
Post a Comment