வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை...
வடக்கு மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தட்டான்குளம் பகுதியில் கூடுதலான நோயளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதே போன்றதொரு நிலைமைதான் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
துணுக்காய் மல்லாவி பிரதேச செயலாளர் பிரிவும் மற்றும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த நோய்க்கு மக்கள் குடிநீராக பாவிக்கும் நீர் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் வடக்கு மாகாணத்தில் இரண்டு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது சிறு நீரக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த மூன்று வருடங்களளாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நடமாடும் சேவை மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம்.
அந்த வகையில் செட்டிக்குளம் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் 9 சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்துடன், வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கான தொடர் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்கி வருவதுடன் இந்த சேவையானது 24 மணித்தியாலங்கள் தொடர்சியாக இயங்கி வருகின்றது.எட்டு இயந்திரங்களின் உதவியுடன் 70 சிறுநீரக நோயாளர்கள் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலயைில், வவுனியா சிறுநீரக சிகிச்சைப் பிரிவிற்கு மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதவியா மற்றும் மதவாச்சி பிரதேசங்களிலிருந்து சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
அதன் காரணமாக இப்போது இருக்கின்ற சிறு நீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை வைத்து நோயாளர்களை பராமரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.
அதனால் செட்டிக்குளத்தில் வெகு விரைவில் 25 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பிரிவையும், மாமடுவில் ஒரு சிறுநீரக மருத்துவப் பிரிவையும் உருவாக்கியிருக்கிறோம்.
வவுனியாவிற்கு ஒரு வைத்தியக் குழுவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு வைத்தியக் குழுவும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும், சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை...
Reviewed by Author
on
May 24, 2017
Rating:

No comments:
Post a Comment