எம்மைத் துரத்தும் மரணத்தை துரத்த நாம் முயன்றோமா?
விஞ்ஞானத் தொழில்நுட்பம், மருத்துவத்தின் அதீத வளர்ச்சி, தகவல் தொடர்பாடலின் வேகம் என எல்லாமும் சேர்ந்து மனித வாழ்வியலை பெருமைப்படுத்தியுள்ளதென்பது ஏற்புடையதே.
எனினும் இவற்றின் கிடைப்பனவுகளுக்கு அப்பால், நோய் என்ற கொடுமை எம்மை துரத்துவதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடிய இடங்களாக மருத்துவ நிலையங்களையும் மருந்து விற்பனை நிலையங்களையும் கூறிக் கொள்ளலாம்.
அந்தளவுக்கு நோய்த் தாக்கம் அனைவருக்குமாக ஆக்கப்பட்டுள்ளது.
உலக்கை பிடித்து உரலில் இடித்து குத்தரிசியில் சோறு சமைத்து உண்ட அந்த இனிமையான வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்.
ஆட்டுக்கல்லில் அரைத்த உழுந்தில் சுட்ட தோசை, அம்மியில் இழுத்தரைத்த சம்பல், ஒடியல் கூழ், குரக்கன் பிட்டு, இலைக்கஞ்சி இவையயல்லாம் நம் முன்னோர்களின் உணவுப் பண்டமாயிற்று.
இப்போது முதல் நாள் மருந்து தெளித்த கீரை, மருந்து விசிறி பழுத்த பழ வகைகள், செத்து ஐந்து நாளாகியும் ஐஸ்கட்டியில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்ட கடலுணவு இவைதான் நம் நாளாந்த உணவாகிய போது புற்றுநோயும் சலரோகமும் உயர்குருதி அழுத்தமும் தொற்றா நோயாகி எங்களை வாட்டி வதைக்கிறது.
இதற்கு மேலாக டெங்கு, பன்றிக் காய்ச்சல், இனம்தெரியாத வைரஸ், காய்ச்சல் உண்ணிக் காய்ச்சல் என்ற தொற்று நோய்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்கிறது.
வீதிகளில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துவது நம் சுற்றுச் சூழலின் தூய்மைக்கு நல்லது என்றால் அதைச் செய்வதற்கு எவரிடமும் மனம் இல்லை.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இல்லாது செய்வோம் என்றால் டெங்கு வாரத்தோடு அதற்கு முடிவு கட்டி விடுகிறோம்.
இந்நிலையில் குப்பைகளை அகற்றுதல் என்ற ஒரு முன்னேற்றகரமான செயற்பாட்டில் இந்த நாட்டின் ஜனாதிபதியும் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
இதனோடு வீதிகளில் குப்பைகள் கொட்டுவதை முற்றாகத் தடுத்தல், ஓர் ஒழுங்குமுறையில் குப்பைகளை அகற்றுதல் என்ற செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதுடன்,
வீட்டுத் தோட்டத்தை ஆரம்பித்து எங்கள் வீட்டில் காய்த்த மரக்கறி; பழுத்த பழங்கள்; வீட்டில் வளர்த்த பசுவின் பால் என்றவாறு எங்கள் உணவை மருந்தற்றதாக - மிகத் தூய்மையானதாக ஆக்கிக் கொள்ள நாம் அனைவரும் சங்கற்பம் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் எங்களைத் துரத்தும் மரணத்தை நாம் துரத்த முடியும்.
-நன்றி-வலம்புரி-
எம்மைத் துரத்தும் மரணத்தை துரத்த நாம் முயன்றோமா?
Reviewed by Author
on
May 05, 2017
Rating:
Reviewed by Author
on
May 05, 2017
Rating:


No comments:
Post a Comment