உலக சைவ மாநாட்டில் கலந்துகொள்ள தமிழருவி சிவகுமாரன், இலண்டன் பயணம்
இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும் தமிழறிஞருமான தமிழருவி த.சிவகுமாரன், இம்மாதம் 6,7 ஆம் திகதிகளில் இலண்டனில் நடைபெறும் உலக சைவமாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இலண்டன் சைவத்திருக் கோவில்கள் ஒன்றியம் நடத்தும் பதினெட்டாவது உலக சைவ மாநாட்டின் முதல் நாள் மாநாடு இலண்டன், ஆர்ஜ்வே உயர்வாசல் குன்று முருகன் ஆலய மகா மண்டபத்திலும் இரண்டாம் நாள் மாநாடு, இலண்டன் கற்வேட், லூசியம் சிவன் ஆலய கலாமண்டபத்திலும் இடம் பெறவுள்ளது.
‘வேத சிவாகம மரபுகளும் ஆலய வழிபாடுகளும்’ ,’சைவத்தின் தொன்மையும் வண்மையும்’ என்னும் பொருள்களில் முறையே இரு தினங்களும் பேருரையாற்றவுள்ள தமிழருவி அவர்கள், 8 ஆம் திகதி கிளாஸ்கோ நகரில் நடைபெறும் துணை மாநாட்டில்,’சைவ விழுமியங்கள்’ என்னும் பொருளிலும் 10 ஆம் திகதி ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெறும் துணை மாநாட்டில், ‘நால்வர் தமிழ்’ எனும் பொருளிலும், இலண்டன் ஈலிங்கில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கியப் பெருவிழாவிலும் சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்துகொண்டு ‘புலம் பெயர் நாடுகளில் தமிழ்-நேற்று,இன்று,நாளை’ என்னும் பொருளிலும் உரையாற்றவுள்ளார். இலண்டனில் 1998 ல் நடைபெற்ற முதலாவது, உலக சைவமாநாட்டில் கலந்துகொண்டதிலிருந்து தொடர்ச்சியாக இங்கு ஏழு மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருமைக்குமுரியவர்.
தமிழருவி சிவகுமாரன் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலண்டன்,சுவிஸ்,ஜேர்மன்,பிரான்ஸ்,ஹொலண்ட்,சிங்கப்பூர்,மலேசியா,அவுஸ்திரேலியா,இந்தியா ஆகிய நாடுகளின் இலக்கிய சமய அமைப்புகளால் தமிழ் இலக்கிய ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்காக தொடர்ந்து அழைக்கப்பட்டுவருபவர். தனது நாவன்மையின் சிறப்பால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஐம்பத்தொன்பது விருதுகளை இதுவரை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை இலண்டனில் நடைபெறும் சைவமாநாட்டில் இந்தியாவிலிருந்து சீர்வளர் கெளமார மடலாய ஆதீனம், சிருங்கேரி ஸ்ரீ நாராயணி பீட அடிகளார், சொல்வேந்தர் சுகி.சிவம்,கனடாவிலிருந்து கலாநிதி ராமநாதன் லம்போதரன் உட்பட இன்னும் பலநாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் பேராளர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
- லண்டனிலிருந்து ‘சைவத்திருமணி’ ந,சச்சிதானந்தன்-
உலக சைவ மாநாட்டில் கலந்துகொள்ள தமிழருவி சிவகுமாரன், இலண்டன் பயணம்
Reviewed by Author
on
May 02, 2017
Rating:

No comments:
Post a Comment