சரிக்குச் சரி போடுங்கள்; பிழையை சரியாகத் திருத்துங்கள்
ஒரு காலத்தில் நம்மண்ணில் கணக்கியல் துறையில் அழகேசன் என்றொரு பிரபலமான ஆசிரியர் இருந்தார்.
கணக்கியல் சார்ந்த நிறையப் புத்தகங்களை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு.
ஒருமுறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் கணக்கியல் (புஉஉலிற்ஐமிவி) விடைத்தாளை திருத்தும் பணி நடைபெற்ற போது, அதன் சிரேஷ்ட விடைத்தாள் திருத்துபவராக அவர் கடமையாற்றினார்.
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருத்தப்பட்ட விடைத்தாள்களை அவர் மீள்பார்வைக்குட்படுத்துகிறார்.
ஒரு மாணவன் செய்திருந்த இலாபநட்டக் கணக்குக்கு ஆசிரியர் ஒருவர் முழுமையாக பிழை போட்டிருந்தார்.
அதைப்பார்த்த அழகேசன் அவர்கள் குறித்த விடைத்தாள் திருத்தியவரை அழைத்தார். எதற்காக இதற்குப் பிழை இட்டீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆசிரியர், சேர்! இந்த மாணவன் பரீட்சை மீதியை, அப்படியே இலாபநட்டக் கணக்கின் வரவுப் பக்கமும் எழுதி செலவுப் பக்கமும் எழுதியுள்ளான் என்றார்.
அதற்கு அழகேசன் அவர்கள், அப்படி எழுதினால் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று கேட்டார்.
இந்தக் கேள்வியால் ஆசிரியர் அதிர்ந்து போனார். பரீட்சை மீதியில் வரவுப் பக்கம் வர வேண்டியது வந்திருந்தால் அதற்குச் சரி போடுங்கள்.
செலவுப் பக்கம் வரவேண்டியது செலவுப் பக்கத்தில் இருந்தால் அதற்கும் சரி போடுங்கள்.
மாறிப்பதிந்தால் புள்ளிகள் கழிப்பது என்ற நிபந்தனை எதுவும் இல்லை என்பதால், அந்த மாணவனுக்கு கிடைக்க வேண்டிய புள்ளிகளை வழங்குங்கள் என்றார் அழகேசன்.
இது எதைக் காட்டுகிறது எனில், சரிக்குச் சரி போடுங்கள். பிழைக்குப் பிழை போடுங்கள் என்பதுதான்.
சரிக்குப் பிழையும் பிழைக்குச் சரியும் இடுவது மிகப்பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அதேநேரம் பிழையை பிழையாகத் திருத்தம் செய்வதும் மிகப்பெரும் அநீதி.
எனவே பிழையையும் சரியாகத் திருத்த வேண்டும் என்பதால், எதிலும் நிதானமாக இருப்பது மிகவும் அவசியம்.
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப் பட்ட விசாரணைக்குழு தனது பரிந்துரையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களி டம் கையளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தப் பரிந்துரைகள் பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தப்படும் போது அதில் இருக்கக்கூடிய விடயங்களை பொதுமக்கள் முழுமையாக அறியமுடியும்.
அதேநேரம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கைகள், அவற்றின் முடிவுகள், இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்வைத்த தமது தரப்பு நியாயப்பாடுகள் என அனைத்தும் எமது மக்கள் அறியக் கூடியதாக இருத்தல் கட்டாயமானதாகும்.
ஏனெனில் குற்றச்சாட்டுக்கள் சரியான முறையில் நிரூபிக்கப்படுவதென்பது மிக மிக அவசியமானது.
ஒரு சிலரின் தேவையை அல்லது வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக எந்த முடிவுகளும் அமையக்கூடாது.
அதேநேரம் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதும் சரியானதும் எனில் அதற்கான தீர்ப்புக்களும் வழங்கப்பட வேண்டும்.
எதுவும் பொதுவெளிப்பகிரங்கப்படுத்தலாக இருத்தல் வேண்டும் என்பதுதான் நாம் இங்கு முன்வைக்கும் கருத்து.
வலம்புரி
வலம்புரி
சரிக்குச் சரி போடுங்கள்; பிழையை சரியாகத் திருத்துங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 06, 2017
Rating:

No comments:
Post a Comment