போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை....
சொந்தக் காணிக்குள் கால் பதிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு இராணுவத் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கும் போராட்டம் இன்றைய தினம் 150ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த நிலையில், கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தை கோரியுள்ள போதிலும், கிராம மக்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
கேப்பாப்புலவில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே கேப்பாப்புலவு கிராம மக்கள் தமது இந்த நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது கேப்பாப்புலவு காணிகளில் முதல் கட்டமாக 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது கட்டமாக 5 மில்லியன் ரூபா நிதி இராணுவத்துக்கு வழங்கப்பட்டு 179 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
03 ஆவது கட்டமாக 148 மில்லியன் ரூபா நிதி இராணுவம் கோரியுள்ளதுடன், 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இந்த நிதியை தான் விரைவாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பணம் கொடுத்து காணியை விடுவிப்பதற்கு இராணுவம் 6 மாதம் கோரியுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள போதிலும், அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை....
Reviewed by Author
on
July 27, 2017
Rating:

No comments:
Post a Comment