இலங்கையில் தமிழர்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜெரமி கோர்பின் வருத்தம்....
இலங்கையில் தமிழர்கள் மீது பாதுகாப்புப் படையினரால் கட்டவிழ்த்து விடப்படும் அச்சுறத்தல் குறித்த தகவல்கள் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துவதாக பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கார்பைன், இலங்கை மீதான பிரித்தானியாவின் வெளிவிவகார கொள்கைகள் வெறுமனே வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இலங்கையில் நீடிக்கும் அச்சுறுத்தல் மீதான பொறுப்புடைமையில் பிரித்தானியா கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து இயங்கும் International Truth and Justice Project என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், போர்க் குற்றங்களில் போதுமான பொறுப்புடைமை இல்லாமல் போனதே இலங்கையில் தொடரும் கொடூரமான அத்துமீறல்களுக்கு முக்கிய காரணம் என பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து உரிய முறையில் நாம் குரல் கொடுக்கத் தவறினால் நாம் அனைவரும் குற்றவாளிகளாகவே பார்க்கப்படும் என கோர்பைன் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
ITJP அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறிசேனா மற்றும் ரணில் ஆட்சியின் கீழ் கைது செய்யப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளான 57 தமிழர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 24 பேர் 2016 மற்றும் 17ம் ஆண்டுகளில் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆட்சிக்கு வந்து 30 மாதங்களில் சிறிசேன ரணில் அரசு இதுவரை இதுபோன்ற இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தவறியுள்ளது. அதுமட்டுமின்றி இலங்கை பாதுகாப்பு படையில் இருக்கும் சில இனவாத நபர்களால் இதுபோன்ற கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்படுவதில்லை.
மாறாக உயர் பதவிகளில் இருக்கும் பல அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக இலங்கையின் மீதான பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாறுதல்கள் கொண்டுவர வேண்டும் எனவும் கோர்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்: ஜெரமி கோர்பின் வருத்தம்....
Reviewed by Author
on
July 23, 2017
Rating:

No comments:
Post a Comment