அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்? பொலிஸ் பரிசோதகர் சாட்சியம்....


வித்தியாவின் கால்கள் இரண்டும் மரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் இரண்டும் தலைக்குப் பின்னால் கட்டப்பட்ட நிலையிலும் சடலமாக காணப்பட்டார் என ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மன்றில் சாட்சியமளித்தார்.

யாழ்.மேல் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்,திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூவரின் தலைமையிலான நீதாய தீர்ப்பாயத்தின் முன்பாக இன்றைய தினம் இரண்டாம் கட்ட விசாரணை இடம்பெற்றது.

விசாரணையின் முன்னர், அரச சட்டத்தரணியினால் இரண்டு சான்றுப்பொருட்கள் மன்றில் சமர்ப்பிக்க்பபட்டன.

அதில் ஒன்று வித்தியாவின் மரபணு அறிக்கை மற்றும் சிரேஸ்ட இராசாயன பகுப்பாய்வு விஞ்ஞானியும் இணைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் வித்தியாவின் உறவினர் ஒருவர் சாட்சியமளித்ததுடன், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகரும் சாட்சியமளித்தனர்.

சாட்சியமளிக்கையில்,

கடந்த 2015ம் ஆண்டு புங்குடுதீவு ஆலடிச்சந்தில் உட்பக்கமாக நிறையப் பொதுமக்கள் கூடி நின்றதாக பொது நபர் ஒருவர் வந்து சொன்னார்.

நானும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் அங்கு சென்று பார்த்த போது ஒரு பெண்ணின் சடலம் காணப்பட்டது.

அந்த பெண்ணின் பிறப்புறுப்பு வெள்ளை நிற துணியால் மூடப்பட்டிருந்தது. கால்கள் இரண்டும் இரண்டு பக்கங்களாக மரங்களுடன் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது.

கைகள் இரண்டும் தலைக்கு மேல் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. வித்தியாவின் கால்கள் 180 பாகையில் விரிக்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர், சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நிறைவடையும் வரை வைத்தியசாலையில் இருந்தேன்.

அன்றைய தினம் புங்குடுதீவுப் பகுதிக்கு ஊர்காவற்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் சென்றிருந்தோம்.

அங்கு முதல் 3 சந்தேக நபர்களான பூபாலசிங்கம் தவக்குமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் இந்திரகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தோம்.

பின்னர் ஏனைய 05 சந்தேக நபர்களான, புங்குடுதீவு பகுதியில் உள்ள நாதன் கடைக்கு அருகாமையில் வைத்து ஊர்காவற்துறை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியும் நானும், ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து கைது செய்தோம்.

சுவிஸ்குமார் உட்பட ஏனைய 4 சந்தேக நபர்களையும் குறிகட்டுவான் பொலிஸ் பிரிவிற்கு கொண்டு சென்றோம்.

அங்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. மக்கள் பெரும் திரளானோர் வந்து 5 பேரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸ் காவலரண் மீது தாக்குதலிலும் ஈடுபட்டார்கள். அப்போது, ஊர்காவற்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, கடற்படையின் படகில் காரைநகர் கடற்படைக்கு 5 சந்தேக நபர்களையும் கொண்டு சென்றார்.

அங்கிருந்து, வட்டுக்கோட்டைப் பொலிஸாரும் இணைந்து யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கொண்டு வந்து அங்கு சிறையில் அடைத்தோம்.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்த போது, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க வந்திருப்பதாகவும், சொன்னார்கள். என்னை யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.

அங்கு நான் சென்ற போது, வடமாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித் ஏ. ஜெயசிங்க மற்றும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பெரேரா மற்றும் யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசேகர உட்பட சிவில் உடையில் ஒருவரும் இருந்தார். அப்போது யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த உபபொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் வந்தார்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் குறித்து வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ. ஜெயசிங்க முதலாவதாக விசாரித்தார்.

மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமாரின்) கடவுச் சீட்டினை வைத்து, வெளிநாட்டிற்கு செல்லும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அந்த பயணத்தினை தடை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பின்னர் சர்வதேச விமான நிலையத்திற்கும் தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

உடனடியாக எனது தொலைபேசி மூலம், ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவலை வழங்கினேன்.

18ம் திகதி 5.10 மணியளவில் தான் சுவிஸ்குமார் என்பவர் விடுதலை செய்யப்பட்டதாக அறிந்து கொண்டேன். பின்னர் வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அறிந்து கொண்டேன் என்றார்.

அதன்பின்னர் 1,2,3, மற்றும் 6 எதிரிகளின் சட்டத்தரணி உட்பட 4 மற்றும் 7 ஆம் எதிரியின் சட்டத்தரணியும் குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்கள்.

பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு 5 பேரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டார்கள். அப்போது குறித்த 5 பேரும் சந்தேக நபர்கள் அவர்களை காப்பாற்ற வேண்டியது எமது கடமையாக இருந்தமையினால் பொது மக்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் மன்றில் சாட்சியமளித்தார்.

வித்தியா எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்? பொலிஸ் பரிசோதகர் சாட்சியம்.... Reviewed by Author on July 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.