பெண் நோயாளியை தாக்கிய மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இன்றைய தினம் காலை பல் பிடுங்குவதற்காக சென்ற யுவதி ஒருவரை அங்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பல் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் குறித்த யுவதி அழுதுள்ளார். இதன் காரணமாகவே அவரை வைத்தியர் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யுவதியொருவர் தனது தாயுடன் பல் பிடுங்குவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை சென்றுள்ளார்.
யுவதியுடன் அவரது தாயார் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாததன் காரணமாக தாய் வெளியில் காத்திருந்துள்ளார்.
இந்நிலையில் வலி தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத யுவதியை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாங்கள் கிராமத்தில் இருந்து வருவதாகவும், இங்கு முறையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளதாகவும் தெரிவித்த குறித்த யுவதியின் தாயார் இவ்வாறு வைத்தியர் நடந்து கொண்டமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் யாரிடம் முறையிடுவது என்று கூட எமக்கு தெரியவில்லை எனவும், தான் வலி தாங்க முடியாமல் அழ வைத்தியர் தனது கன்னத்தில் அறைந்துள்ளதாகவும் குறித்த யுவதி முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண் நோயாளியை தாக்கிய மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment