மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்! அமைச்சர் ப.சத்தியலிங்கம்
மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வடகிழக்கில் குடியேறிய மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு நயினாமடு கிராமத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அண்மைக்காலமாக மலையகத் தமிழ் உறவுகளைப் பற்றி விரும்பத்தகாத, அருவருப்பான விமர்சனங்களை சிலர் முன்வைப்பது மனவேதனையை தருகின்றது.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் இனதீதியான வேறுபாடு குறைந்த அளவில் காணப்படுகின்றது.
குறிப்பாக மொழி ரீதியாக இரண்டு தேசிய இனங்களே காணப்படுகின்றன. அவையும் கலாச்சார, மத வழிபாட்டு முறைகளில் பெரும்பாலும் ஒத்தனவாகவே காணப்படுகின்றன.
எனினும் சுதந்திரத்திற்கு பின்னர் எண்ணிக்கையில் அதிகளவிலான சிங்கள தேசியவாதிகள் தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதிபலிப்பு தான் நாட்டில் ஏற்பட்ட உரிமைப் போராட்டமும் அதன்பால் ஏற்பட்ட இழப்புகளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வட, கிழக்கை பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 80களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வடகிழக்கில் குடியேறிய மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கான அகிம்சை போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி ஒடுக்கப்பட்ட தமிழர்கள் என்பதன் அடிப்டையில் ஈழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்து போராடியுள்ளனர்.
எனினும் அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகள் இந்த கொடிய போரினால் நொந்து போன மலையக உறவுகளின் மனதை மேலும் நோகடிப்பதாக அமைந்துள்ளது.
பிரதேச வாதம், மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல. ஏற்கனவே அரசியல் ரீதியாக முரண்பட்ட சமூகமாக காணப்படும் தமிழ் பேசும் மக்கள் இவ்வாறான குறுகிய வட்டத்திற்குள் பிரிந்து சென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தை கேள்விக்குறியாக்கி விடும் என்றார்.
மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்! அமைச்சர் ப.சத்தியலிங்கம்
Reviewed by Author
on
August 06, 2017
Rating:

No comments:
Post a Comment