தாய்ப்பால்... நிமோனியா, அலர்ஜியில் இருந்து காக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் அமுதம்! WorldBreastfeedingWeek
தாய்ப்பால்... இதை அமுதம் என்றும் சொல்லலாம். இதற்கு இணை உலகில் வேறு எதுவும் இல்லை. தாய்ப்பாலுக்கு நிகர் தாய்ப்பால் மட்டுமே. உன்னதமானது; சுத்தமானது; சத்துக்கள் நிரம்பியது... இப்படி இதன் பெருமையையும் புகழையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் மகத்துவத்தை அறிந்ததால்தான் மற்ற விழிப்புஉணர்வு தினங்களை எல்லாம் ஒரு நாள் நிகழ்வாக முடித்துக்கொள்ளும் ஐ.நா மையம், தாய்ப்பாலை மட்டும் ஒரு வாரமாகக் கொண்டாடித் தீர்க்கிறது. `உலக தாய்ப்பால் வாரம்’ ஆண்டுதோறும் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் 7- ம்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே, பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தாய்ப்பால்
`தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன’ என்று நவீன ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் அடித்துச் சொல்கின்றன. ஆய்வுகள் கிடக்கட்டும்... தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நெருக்கத்தையும் பந்தத்தையும் ஏற்படுத்துவது தாய்ப்பால்தான். தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியத்தையும், மன திருப்தியையும் தருகிறது என்பதை நம் பாட்டிகள் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் பல தலைமுறைகளாக தாய்ப்பால் கொடுப்பதைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பது நமது மரபாகவே இருந்து வந்த நிலையில், இதற்காக விழிப்புஉணர்வு ஏற்படுத்தவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?
மனிதன் மட்டும்தான் பாலுக்காக மற்ற விலங்குகளைச் சார்ந்து இருக்கிறான். தாய்ப்பால் கிடைக்காததற்கு இரு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, தாயால் குழந்தைக்கு பால் புகட்ட முடியாத அளவுக்கு உடலில் ஊட்டச்சத்து குறைப்பாடு. மற்றொன்று, பால் புகட்டக்கூடிய திறன் இருந்தும், தாய் கொடுக்க மறுப்பது. `இதில் முதல் வகைப் பிரச்னையைத் தீர்ப்பது ஓரளவுக்குக் கடினம். என்றாலும், இரண்டாவது வகைக்கு தாய்ப்பால் பற்றிய தவறான புரிதலே காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இவை தவிர, தாயின் உடல் மெலிந்திருப்பதால், போதுமான பால் சுரக்கவில்லை அல்லது குழந்தை மிகவும் குண்டாக இருப்பதால் தான் கொடுக்கும் பால் மட்டும் போதாது என்ற அம்மாவின் தவறான நம்பிக்கை... இவையும் காரணங்களாக இருக்கின்றன.
குழந்தை
குழந்தை பிறந்ததும் தாய் அமைதியான மனநிலையில் இருக்கும்போது 'குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றும். அந்தச் செய்தி மூளைக்கு கடத்தப்பட்டு, உடனே அதற்கான ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன்தான் பால் சுரப்புக்கு உதவுவது. அதே நேரத்தில், தாயின் மனநிலை அமைதியில்லாமலோ, குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற மனநிலையோ, விருப்பமோ இல்லை என்றாலோ ஹார்மோன் சுரப்பு தடைப்படும். தாய்ப்பாலும் சுரக்காது.
`பால் புகட்டுவதால், மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது. தாயின் கர்ப்பப்பை சுருங்கி, பழையநிலைக்குத் திரும்ப, தாய்ப்பால் உதவும்’ என தாய்ப்பால் கொடுப்பதன் பலன்களை பட்டியலிடுகிறார்கள் மருத்துவர்கள்.
தாய்ப்பால் கொடுக்காவிட்டால்..?
குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டாத தாய்மார்களுக்கு மார்பகத்தில் பால் கட்டி, வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இந்த மாதிரி நிலை, அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும். சிலருக்கு இதன் தீவிரம் அதிகமாகி, குளிர் காய்ச்சல் வரைக்கும்கூட ஏற்படலாம். சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால், சீழாக மாறும் நிலைகூட ஏற்படலாம். அதை அறுவைசிகிச்சை செய்து அகற்றவேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். தாய், தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில், மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை. இதை உணர்ந்த வெளிநாடுகள் ரத்தம், தோல் சேமிக்க வங்கிகள் இருப்பதுபோல, தாய்ப்பாலுக்காக வங்கிகளைத் தொடங்கி, தாய்ப்பாலை தானமாகப் பெற்று சேமிக்கின்றன. நம் அரசு மருத்துவமனைகளிலேயேகூட தாய்ப்பால் வங்கிகள் உள்ளன.
ஏன் அவசியம்?
இது, உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி என அனைத்தையும்கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு. குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்துக்கும் தேவையான எல்லாச் சத்துக்களும், சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. பிற பால்களைவிட தாய்ப்பால் எளிதில் செரிமானமாகக்கூடியது. தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகொண்ட புரதப் பொருள் (Immuno Globulin) குழந்தையை நோய்கள், நிமோனியா, ஒவ்வாமை போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில வகையான புற்றுநோய்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரைநோய், உடற்பருமன் போன்றவை உருவாவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும்.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. கலப்படம் செய்ய முடியாதது. இது, சில நோய்களுக்கு மருந்தாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை விட்டுவிட்டு புட்டிப்பால் தருவதால் குழந்தைக்கு வாந்தி, பேதி ஏற்படலாம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உண்டாகலாம்..
நன்றி -விகடன்-
தாய்ப்பால்... நிமோனியா, அலர்ஜியில் இருந்து காக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் அமுதம்! WorldBreastfeedingWeek
Reviewed by Author
on
August 02, 2017
Rating:

No comments:
Post a Comment