அண்மைய செய்திகள்

recent
-

குந்தியிருந்து குமுறி அழுவதுதான் தமிழரின் உரிமையாயிற்று


தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர் என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை படுகுழிக்குள் வீழ்த்தி விட்டது என்பது நிறுதிட்டமான உண்மை.

வன்னி பெருநிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட பின்பு, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பது இந்த ஜென்மத்தில் மறக்க - மன்னிக்க முடியாதது.

இதை நாம் கூறும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக நாம் கூறுவதாக யாரும் கருதிவிடக் கூடாது.

இந்தக் கொடுமையை கூட்டமைப்பின் தலைமை தவிர்ந்த யார் செய்திருந்தாலும் அதனை இப்படித்தான் கூறியிருப்போம்.

வன்னிப் போரில் நாம் இழந்தது கொஞ்ச மல்ல. எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்களை கொடூரங்களை சனல் - 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் உலகம் முழுவதற்கும் வெளிப்படுத்தியிருந்தும் அதனை நாம் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்காக இருந்த ஒரே பலம் எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட இழப்பு - தமிழின அழிப்பு - மிகக் கொடூரமான போர்க்குற்றம் என்பவைதான்.

ஆனால் இவற்றையயல்லாம் மழுங்கடிக்கச் செய்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டது என்று கூறி எல்லாவற்றையும் நாசம் செய்தவர்கள் யார் என்பதைத் தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

மிகப்பெரும் போர்க்குற்றம் நிகழ்ந்தது என்று சர்வதேசம் கத்தி முழங்கிய போது எங்கள் அரசியல் தலைமை பாராமுகமாக இருந்தது ஏன்?

இத்துணை அழிவுகள் நடந்த பின்புதான் இணக்க அரசியல் பற்றிய சிந்தனை எமக்கு ஏற்பட்டதா?

இணக்க அரசியல் ஏற்படுவதன் இறுதிச் சந்தர்ப்பம் விடுதலைப் புலிகளை போரில் இருந்து காப்பாற்றுவதற்கானதாக இருந்திருக்க வேண் டும். அல்லது அதற்கு முன்பானதாக இருந்திருக்க வேண்டும்.

இதைவிடுத்து இலங்கையில் தமிழின அழிப்பு நடந்தது, இலங்கை ஆட்சியாளர்களும் படைத்தரப்பினரும் அந்தப் பாதகத்தைச் செய்தனர் என்று சர்வதேச சமூகம் கூறிய போது, எங்கள் அரசியல் தலைமை ஆமாம் அதுவே உண்மை என்று உரக்கக் கூறாமல்; இணக்க அரசியல் பற்றிச் சிந்தித்ததென்றால், அதற்குக் காரணம் அரசியல் இராஜதந்திரத் தின் பஞ்சமோ அன்றி போரில் ஏற்பட்ட இழப் பின் பதற்றமோ அல்ல.

மாறாக பதவி ஆசை, பண ஆசை இவை தான் எங்கள் இனத்துக்கு கிடைத்த சர்வதேச ஆதரவை விற்றுப் பிழைக்க வைத்தது.

என்ன செய்வது போர்க்குற்றம் தொடர்பில் இராணுவம் மீது கைவைக்க யாருக்கும் அனுமதியில்லை என்று ஜனாதிபதி மைத்திரியும் கூறி தன்னையும் பேரினவாதத்தின் சிங்கம் என அடையாளப்படுத்தியுள்ளார்.

ஆக, போரில் கொல்லப்பட்ட தமிழர்கள்; காணாமல்போன தமிழ் இளைஞர்கள்; இவை தமிழர்களுக்கு சிங்களவர்கள் காலத்துக்குக் காலம் கொடுக்கும் பரிசும் விருதும்.

இதுபற்றி குந்தியிருந்து குமுறி அழுவதைத் தவிர தமிழருக்கு வேறு எந்த உரிமையும் கிடையாது என்பதைத்தான் நல்லாட்சியின் செய்தி கூறுகிறது.

ஓ! கூட்டமைப்பின் தலைமை மக்காள் உங்களுக்கு கிடைத்த பதவியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். தமிழர்கள் எக்கேடு பட்டாலும் உங்களுக்கென்ன.  
-நன்றி-வலம்புரி-
குந்தியிருந்து குமுறி அழுவதுதான் தமிழரின் உரிமையாயிற்று Reviewed by Author on September 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.