தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2315 முதுகலை ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாட்டு கல்வித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, கடவுளின் குழந்தைகளாய் போற்றிப் பாராட்டி நேசிக்கப்பட வேண்டிய, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கல்வியை போதிக்க, 58 சிறப்பு ஆசிரியர்களை அம்மாவின் அரசு நியமித்துள்ளது என்பதை இந்நேரத்தில் பெருமையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
கல்வியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் அறிந்துள்ளதன் காரணமாகத்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு 2017-18ஆம் ஆண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடாக 26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 14 வகையான மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் கலை, இலக்கியத்திறன்களை வெளிக் கொணரவும், தனித்திறன்களை வளர்க்கவும், தமிழர்தம் பாரம்பரிய கலை மற்றும் பண்பாடு மரபுகளைப் போற்றிடும் வகையிலும், கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின் பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் ஒருங்கிணைந்து பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து “புதுமைப்பள்ளி” என்ற விருது வழங்கப்படவுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு தலா 4 பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை இவ்வாண்டு முதல் சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்று விக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து ஒரு மாவட்டத்திற்கு தலா 6 ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொரு வருக்கும் “கனவு ஆசிரியர்” என்ற விருதும், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கக் தொகையும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை சுமார்ட் வகுப்பு அறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 இலட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.
எதிர்வரும் ஆண்டுகளில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான கலைத் திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள் இந்திய அளவில் தரம் வாய்ந்ததாக, தேசிய அளவில் நடைபெறும் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாற்றுவதற்கான செயல்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் 2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும், 2019-20 கல்வியாண்டில் 2, 7, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், 2020-21 கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளன.
மேலும் அனைத்துப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், மனஅமைதி பெறுவதற்கும், உடல் வலிமை பெறுவதற்கும் யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே, எல்லாப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று பணிநியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்ல, உலகத்தின் உன்னதமான அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள் என்பதையும், ஒழுக்கம், நன்னடத்தை, காலம் தவறாமை போன்ற நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து அவர்களின் முழுமையான வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோரே நீங்கள் தான் என்பதையும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்ட அமைச்சர்கள், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீவ் யாதவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Reviewed by Author
on
September 22, 2017
Rating:

No comments:
Post a Comment