26 ஆண்டுகளாக சிறையில் இளமையை தொலைத்த தமிழர்கள்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சருக்கு தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் இயக்குநர் வ.கௌதமன் இன்று அனுப்பியுள்ள மனு ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “26 ஆண்டுகளாக தங்களுடைய இளமையையும், வாழ்க்கையையும் சிறையிலேயே தொலைத்த ஏழு தமிழர்களின் ( பேரறிவாளன் - சாந்தன் -முருகன் உள்ளிட்ட 7 பேரின் ) விடுதலையை மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உறுதி செய்திருந்தார்.
எனினும், சில காரணங்களால் விடுதலை தள்ளிப்போனது .பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் தங்களின் தண்டனைக்காலத்தை தாண்டியும் இன்றுவரை சிறையிலேயே வாடுவது என்பது மனிதகுலம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு வன்முறையாக இந்த உலகம் பார்க்கிறது.
தமிழர்கள் அதனை சொல்லமுடியாத துயரமாக எண்ணி வருகின்றனர். எனவே தங்கள் தலைமையிலான அரசு தகுந்த சட்ட வழிமுறைகளை கையாண்டு ஏழுபேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகம் தங்களையும், தங்கள் தலைமையிலான அரசையும் போற்றி கொண்டாடும்.
அத்துடன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று வாக்குறுதி தந்த "ஹார்வர்டு பல்கலைக்கழக" தமிழ் இருக்கைக்கான செலவினை தாங்கள் மீத "ரூபாய் 10 கோடிகளை" தமிழக அரசே ஒதுக்கி உலகத்தமிழர்கள் உள்ளத்தில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
கீழடி அகழாய்வு என்பது மிக நேர்மையாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் அவர்களுடைய தலைமையின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.
இடையில் சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு வேறொருவரை அமர்த்தி அந்த ஆய்வு முந்தைய தொடர்ச்சி காணப்படவில்லை என்ற காரணத்தை கூறி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசே மேற்கண்ட அகழாய்வை முன்னின்று நடத்தும் என்ற தங்கள் தலைமையிலான அரசின் அறிவிப்பு உலக தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
மாண்புமிகு தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் மூலம் மேற்கண்ட அறிவிப்பு வெளியானது. மேற்கண்ட ஆய்வினை தமிழக அரசு தொல்லியல் ஆய்வாளர் திரு.அமர்நாத் அவர்களின் தலைமையில் மேற்கொள்ள ஆணையிடவேண்டும்.
மேலும், அறம் சுமந்து 30 ஆண்டுகளுக்கு மேல் வள்ளலார் அவர்கள் வாழ்ந்த, தற்போதைய சென்னை வள்ளலார் நகரில் உள்ள அருட்பிரகார வள்ளலார் அவர்களின் வாழ்விடத்தை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளையும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் சார்பாக "தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு " தங்களின் மேலான நிறைவேற்றலுக்கு முன்வைக்கிறது.
இந்நிலையில், தங்கள் தலைமையிலான அரசு விரைவில் நிறைவேற்றி உலக தமிழர்களின் நெஞ்சங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 ஆண்டுகளாக சிறையில் இளமையை தொலைத்த தமிழர்கள்!
Reviewed by Author
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment