சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை: புதுச்சேரியிலும் பரவலாக மழை
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு வார காலத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த நிலையில், அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதேசமயம் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. இதன் காரணமாக முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
இந்நிலையில், இன்று (10ம் தேதி) முதல் 13-ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் ஒரு சில முறையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையில், புரசைவாக்கம், எழும்பூர், திருவொற்றியூர், அடையார், தரமணி, திருவான்மியூர், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், அண்ணா நகர், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் பகுதிளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை: புதுச்சேரியிலும் பரவலாக மழை
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment