அண்மைய செய்திகள்

recent
-

462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை: குமரி மாவட்ட கலெக்டர் தகவல்


குமரி மாவட்டத்தில் இதுவரை 462 மீனவர்கள் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.

462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை: குமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:

‘ஒக்கி’ புயல் கோரத்தாண்டவத்தால் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே சில மீனவர்களின் உடல்கள் கடலில் மிதப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மீனவ மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 44 மீனவ கிராமங்களும் சோகமயமாக காட்சி அளிக்கிறது.

மாயமான மீனவர்கள் எத்தனை பேர்? கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள், வள்ளங்கள், நாட்டுப்படகுகள் எத்தனை என்பதும் தெளிவாகத் தெரியாமல் இருக்கிறது. இதனால் மீனவ மக்கள் மாயமானதாக சொல்லும் மீனவர்கள் மற்றும் படகுகள் எண்ணிக்கையும், அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படும் மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கையும் முரணாக உள்ளது.

மாயமான மீனவர்களை கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே புயலால் மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.

குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் எத்தனை பேர்? படகுகள் எத்தனை? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று குறைந்தது 10 நாள் முதல் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடிக்கக் கூடியவர்கள். அதிகாலையில் சென்று இரவில் கரை திரும்பக்கூடிய மீனவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய நிலவரப்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களில், 13 வள்ளங்களில் மீன்பிடிக்க சென்ற 35 மீனவர்களும், 43 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 மீனவர்களின் விவரங்கள் தெரியாமல் இருக்கிறது. அவர்களை கடலோர காவல்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மூலம் தேடும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.

முதலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்டை மாநிலங்களில் இருந்து மீனவர்கள் மீட்கப்பட்டு வருவதால் அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. அதேபோல் எந்த தகவலும் இல்லாத மீனவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். மீனவ கிராமங்களில் அதிகாரிகள் இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
462 மீனவர்கள் பற்றி இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை: குமரி மாவட்ட கலெக்டர் தகவல் Reviewed by Author on December 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.