8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படவில்லை - தமிழக அரசுக்கு சித்ரா லட்சுமணன் கோரிக்கை
நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தைக் கலைஞர்களுக்கு தருவது ரசிகர்களின் கைதட்டல்களும், பாராட்டுக்களும், அவர்களது திறமையை அங்கீகரிக்கும் விதத்திலே வழங்கப்படுகின்ற விருதுகளும் தான்.
கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாததால் திரை உலகத்தையும் திரைப்படக் கலைஞர் களையும் தமிழக அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த்திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தை அடியோடு போக்கி திரைப்படக் கலைஞர்களின் எண்ண ஓட்டத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கு தரப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை ஒரே நாளில் அறிவித்த தங்களுக்கு கலை உலகம் மிகப்பெரிய அளவிலே நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விருதுகளோடு இணைந்து சிறந்த தமிழ் படங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையையும் அறிவித்து வாட்டத்தோடு இருந்த பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்களது கொடை உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.
இந்த விருதுகளைப் போலவே 1959-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகளும், 2011-ஆம் ஆண்டு முதல் எந்த கலைஞருக்கும் வழங்கப்படவில்லை என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளையும் அன்பு கூர்ந்து உடனடியாக அறிவித்து தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களையும் தாங்கள் கவுரவிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படவில்லை - தமிழக அரசுக்கு சித்ரா லட்சுமணன் கோரிக்கை
Reviewed by Author
on
February 04, 2018
Rating:
No comments:
Post a Comment