விபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்கள் மரணம்-(படம்)
மன்னார் யாழ் மற்றும், மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதிகளில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரு குடும்பஸ்தர்கள் நேற்று வெள்ளிக்கிழமை(23) உயிரிழந்துள்ளனர்.
மன்னார்-யாழ் பிரதான வீதியில் கடந்த 12 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் முருகாண்டி சக்திவேல்(வயது-32) என்பவர் நேற்று வெள்ளிக்கிழமை (23) காலை உயிரிழந்துள்ளார்.
மன்னாரில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 12 ஆம் திகதி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அன்றைய தினம் இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருந்த போது யாழ்-மன்னார் பிரதான வீதி முழங்காவில் பகுதியில் மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
-எனினும் குறித்த குடும்பஸ்தர் நேற்று வெள்ளிக்கிழமை(23) காலை சிகிச்சை பலன் இன்றி யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரனையின் பின் மன்னாரில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதே வேளை மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் கடந்த 4 தினங்களுக்கு முன் இடம் பெற்ற விபத்தில் படு காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செபஸ்தியாம் பிள்ளை யூலியஸ்(வயது-63) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று வெள்ளிக்கிழமை(23) மதியம் உயிரிழந்தார்.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் இரவு 8 மணியளவில் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது தாழ்வுபாடு-மன்னார் பிரதான வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது கணவன் மனைவி மற்றும் பிரிதொரு மோட்டார் சைக்கிலில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபர் ஆகிய மூவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தந்தையான செபஸ்தியாம் பிள்ளை யூலியஸ்(வயது-63) அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை(23) மதியம் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரனைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்கள் மரணம்-(படம்)
Reviewed by Author
on
March 25, 2018
Rating:

No comments:
Post a Comment