தமிழ் மக்களை இனி யாராலும் ஏமாற்ற முடியாது!
எடுத்ததற்கெல்லாம் கருத்துரைப்பதன் மூலம் தங்களின் அரசியல் இருப்பை நிலைநிறுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.
மக்களுக்குச் சேவை செய்து, அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு தமிழ் மக்களின் மனங்களை வெல்லுதல் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை என்றாயிற்று.
முன்பெல்லாம் தமிழ் அரசியல்வாதிகள் என்போர் தாம் சார்ந்த தொகுதி மக்களின் மனங்களை வென்றவர்களாக இருந்தனர்.
வேலைவாய்ப்புக்களை வழங்குவது, தனது தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது என ஏகப்பட்ட பணிகளைச் செய்தவர்களே அரசியல்வாதிகளாகத் திகழ்ந்தனர்.
ஆனால் இப்போது அந்தப் பேச்சுக்கே இடமில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறுகின்றவர்களாகவே தமிழ் அரசியல்வாதிகள் தங்களை இனங்காட்டுகின்றனர்.
தாங்களும் அரசியலில் இருப்பதைக் காட்டுவதற்காக இடையிடையே அறிக்கைகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றனர்.
உண்மையில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக உள்ளனர். அரசியல் சார்ந்து அவர்களின் பார்வை மிகத் தெளிவாக உள்ளது.
எனினும் இதனைத் தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப் பது தான் மிகப்பெரும் அபத்தம்.
தமிழ் மக்களின் இன்றைய அரசியலில் அரசியல்வாதிகளே திருந்த வேண்டியவர்கள். அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுடையதாகும்.
இருந்தும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மக்கள் திருந்த வேண்டும் என்பது போல கருத்துரைக்கின்றனர்.
இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எப்படியும் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று யார் நினைத்தாலும் இனி மேல் அது சாத்தியப்படாது என்பதே உண்மை.
ஆகையால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களைத் திருத்தி தங்களின் நேர்மைத் தன்மையை தமிழ் மக்களிடம் நிரூபிக்க வேண்டும்.இதற்காக அவர்கள் ஒரு காலவரையறையை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் நேர்மைத் தன்மையை நிரூபிப்பதென்பது பின்வரும் விடயங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதில், தென்பகுதி அரசியல் கட்சிகளுடன் - அரசியல்வாதிகளுடன் தமக்கு நெருக்கமான உறவு இல்லை என்பது.
தென்பகுதி அரசியல் கட்சிகள் தமிழர் தாயகத்தில் தமது இருப்பை நிலைநிறுத்த தாம் ஒருபோதும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை என்பது.
தென்பகுதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்தி அரசியல் பதவிகளைத் தாம் எக்காலத்திலும் பெறமாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்குதல்.
இவை யாவற்றுக்கும் மேலாக தென்பகுதி அரசியல் வாதிகளின் தனிப்பட்ட அல்லது அவர்களின் கட்சி சார்ந்த கொண்டாட்டங்கள், நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை.
என்பது போன்ற விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தங்களைத் தூய்மையானவர்களாகக் காட்டுவார்களாக இருந்தால்,அதுவே அவர்களின் நேர்மைத் தன்மையாகும்.
இதை தமிழ் அரசியல்வாதிகள் செய்வார்களா?
- Valampuri-
தமிழ் மக்களை இனி யாராலும் ஏமாற்ற முடியாது!
Reviewed by Author
on
April 22, 2018
Rating:

No comments:
Post a Comment