35 பேர் பரிதாபமாக பலி - குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்து
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் 180 பேருடன் சென்ற படகு டுனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 67 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
மத்திய தரைகடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 இலட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
இதுதவிர கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது.
இருப்பினும் உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
35 பேர் பரிதாபமாக பலி - குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்து
Reviewed by Author
on
June 04, 2018
Rating:

No comments:
Post a Comment