என்னை வலுக்கட்டாயமாக – அரசியலில் புகுத்தினார்கள் -வடக்கு மாகாண முதலமைச்சர் !!
ஆத்மீகம், சட்டம், சமுதாயம், சரித்திரம் என்று பலதைப் பற்றிப் பேச்சுக்களை ஆற்றி வந்து கொண்டிருந்தேன். அப்பேர்ப்பட்ட என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அரசியலில் புகுத்தினார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
காரைநகர்- களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில், திருமஞ்ச வெள்ளோட்டமும், திருமஞ்சத் திருவிழாவும் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆலய தரிசனம் கோடி புண்ணியம்! நான் நீதித்துறை சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாரத்துக்கொரு முறையாவது கோவிலுக்குச் சென்று ஆற அமர அமர்ந்திருந்து இறைவனை வணங்கிப் பொழுதைப்போக்கிக் கொண்டிருந்தேன்.
ஆத்மீகம், சட்டம், சமுதாயம், சரித்திரம் என்று பலதையும் பற்றி பேச்சுக்களை ஆற்றி வந்து கொண்டிருந்தேன். அப்பேர்ப்பட்ட என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அரசியலில் புகுத்தினார்கள். ஆத்மீகம் எனது அரசியலில் கலந்ததால் என்னைப் பலர் வெறுப்புடன் பார்த்தார்கள். காரணம்! உள்ளதை உள்ளபடியே நோக்கியமை தவறு என்று அவர்கள் கூறினார்கள். எனினும் என் பணி என் நோக்கின் அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
முதலமைச்சராக நான் பதவிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து எனது வதிவிடத்துக்கு மிக அருகில் உள்ள நல்லூர் கந்தன் ஆலயத்திற்கே சென்று வழிபட நேரம் அற்றவனாக முழுநேரமும் அரசியல் வேலைகளில் மூழ்கிக் கிடக்க வேண்டியுள்ளது.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு அமைவாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதும் ஒரு வித்தியாச மான மனநிறைவைத் தருகின்றது.
ஆலயங்கள் மன ஒடுக்கத்திற்கும், சிந்தனைத் தெளிவிற்கும், இறைபக்தி வளர்வதற்கும் ஏற்ற இடமாகும். ஆனால் அவ்வாறான நன்மை களைப் பெற நாங்கள் முயற்சிக்க வேண்டும். வெறும் சம்பிரதாயங்களும் சமயச் சடங்குகளும் எம்மை இறைவனுடன் சேர்க்காது. மனந்திறந்து நெஞ்சுருகிப் பாடுபவனே இறையருளைச் சுகிக்கின்றான்.
இந்த ஆலயப் பிரகாரத்தில் இன்னொன்றைக் கூற ஆசைப் படுகின்றேன். கொடை வள்ளல்களும், தர்மவான்களும், வர்த்தகப் பெருமக்களும் வாழ்ந்து வரும் புண்ணிய பூமி காரைநகர். உங்கள் வாழ்க்கை மேலும் விருத்தி அடைய வேண்டும் என்றால் வருமானங்களில் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்குத் தானஞ் செய்ய ஒதுக்கி வாருங் கள். எல்லாம் நல்லனவாகவே அமையும் – என்றார்.
என்னை வலுக்கட்டாயமாக – அரசியலில் புகுத்தினார்கள் -வடக்கு மாகாண முதலமைச்சர் !!
Reviewed by Author
on
July 10, 2018
Rating:

No comments:
Post a Comment