ஜனாதிபதியிடம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை -
வடக்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வடக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் ஊடாக அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வடக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் திடீர் என்று அதிகரித்துள்ளன. இந்நிலையில், வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரையோ அல்லது இளைப்பாறிய சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரினது தலைமையிலோ வடமாகாண சபையின் அலுவலர்களையும் உள்ளடக்கி மேற்படி வன்முறை, போதைப் பொருள் விநியோகம், அவற்றின் பாவனை மற்றும் மண் கடத்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உடனடி அறிக்கை ஒன்றைப் பெறவேண்டும்.
மேலும் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு மன்னிப்பு வழங்க முடியாது இருப்பதைப்பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஆகையினால், அவரின் குழந்தைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு கைதியை மாற்றினால் தாய் இல்லாத குழந்தைகள் தமது தந்தையைச் சென்று கண்டுவரமுடியும் என கூறப்பட்டதை வரவேற்று அதற்குரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் முதலமைச்சர் நிதியத்தின் நியதிச் சட்டவரைவு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.
ஐந்து வருடங்களாக அதுபற்றிக் கோரியும் இன்னமும் தாமதிப்பது எமது வடமாகாண பொருளாதார விருத்தியை அரசாங்கமானது விரும்பவில்லையோ என்று எண்ண வைக்கின்றது” என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை -
Reviewed by Author
on
July 02, 2018
Rating:

No comments:
Post a Comment