உலகில் பல ஆண்டுகளாக மரம் வளர்க்கும் மனிதர்கள், விலங்குகளைப் பாதுகாக்கும் ஆர்வலர்கள் பற்றிய பல கதைகள் உள்ளன. அக்கதைகளைப் படிக்கும்போது இவர் ஏன் இதைச் செய்கிறார், இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று பலரும் நினைக்கலாம். ஒரே வேலையை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் செய்வதற்குக் காரணம் அந்த வேலை தரும் போதைதான். அந்தப் போதை கொடுக்கும் உற்சாகத்தால் அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கும் வேலையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ஒருவர்.

அது மேற்கு இலங்கையின் ஒரு கடல் பகுதி. அதிக அளவில் வளர்ந்திருந்த அலையாத்திக் காடுகளின் அடர்த்தி கடந்த 15 ஆண்டுகளாகக் குறைய ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் தொழில் வள மேம்பாடு. அழிந்த காடுகளுக்கு இணையாக மீண்டும் காடுகள் வளர ஆரம்பிக்கின்றன. அதைக் கடந்த 16 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார், டக்ளஸ் திசேரா (Douglas Thisera). இலங்கை மீனவர் ஒன்றியமான சுதேச நிறுவனத்தின் கரையோரப் பாதுகாப்பு இயக்குநர் என்ற பதவி வகித்து வருகிறார். காலை 7 மணிக்குத் தனது வேலையை ஆரம்பித்துவிடுகிறார் திசேரா. தன் படகை எடுத்துக் கொண்டு கடற்கரையிலிருக்கும் அலையாத்திக் காடுகளினுடைய விதைகளைச் சேகரிக்கிறார். சில மணிநேரங்கள் நீடிக்கும் அந்தப் பறிப்பு, முடிந்தவுடன் தனது வீட்டுக்கு வந்துவிடுகிறார். தன் வீட்டுப் பண்ணையில் இருக்கும் ஒவ்வொரு பைகளிலும், ஒவ்வொரு விதையாக விதைக்கிறார் (அந்த விதையானது வளர சில காலங்கள் எடுத்துக்கொள்ளும்). விதைத்த பின்னர் தயாராக இருக்கும் அலையாத்தி மரக் கன்றுகளை எடுத்துக்கொண்டு நடுவதற்காகக் கிளம்புகிறார். தன் பண்ணையில் உருவாக்கிய கன்றுகளை எடுத்துக்கொண்டு கடற்கரையோர கிராமங்களுக்கு கொண்டு சென்று இலவசமாகக் கொடுத்து வருகிறார்.
தன்னுடைய பதினோறு வயதில் மீன்பிடித் தொழிலை ஆரம்பித்திருக்கிறார் திசேரா. பெரும்பாலும் மீன்பிடிப்பது அலையாத்தி காடுகளைச் சுற்றித்தான். அவற்றில்தான் அதிகமான மீன்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறது. மீன்கள் தவிர பல உயிரினங்களும் அலையாத்திக் காடுகளால் பலனடைந்திருக்கின்றன. மீன்களுடன் சேர்த்து நண்டுகளையும் பிடித்து விற்பனை செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தொழில் வளர்ச்சியின் தாக்கத்தால் ஏற்பட்ட அலையாத்திக் காடுகளின் அழிவு ஆரம்பிக்கிறது. அம்பன் தோட்டம் என்ற கரையோரப் பகுதிகள் தொடங்கி பல பகுதிகளும் அலையாத்தி காடுகளை இழக்க ஆரம்பிக்கின்றன. அதன் காரணமாக ஊருக்குள் தண்ணீர் புக ஆரம்பிக்கிறது. இது வெகுவாக திசேராவைப் பாதிக்கிறது. அதனால் சுதேசா நிறுவனத்தில் இணைந்து அலையாத்திக் காடுகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்காக 14 மாவட்டங்கள் முழுமையாகப் பயணம் செய்து மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதன் காரணமாக அதிகமான மக்கள் இவரின் பின்னால் திரும்ப ஆரம்பித்தனர். அதன் விளைவாக சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டத்தை அரசே தொடங்கியிருக்கிறது. தற்போது இத்திட்டம் இலங்கை முழுவதும் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. சுதேசா நிறுவனம் இலங்கை அரசு மற்றும் அமெரிக்கச் சூழல் பாதுகாப்புக் குழு ஆகியவை இணைந்து 3.4 மில்லியன் டாலர்கள் செலவில் இத்திட்டத்திற்கான பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. சுதேசா நிறுவனத்தின் மூலமாகக் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்தந்த கிராமத்துக்குப் பொறுப்பாளராகவும் நியமித்திருக்கிறார். முதலில் மக்களும் சதுப்பு நிலம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதன் பின்னர் இத்திட்டம் அரசால் முன்னெடுக்கப்பட்டு மக்களுக்கு அலையாத்தி காடுகளை வளர்க்க உதவித்தொகையும் வழங்கப்பட்ட பின்னர்தான் அம்மக்களுக்கு இத்திட்டத்தின் வீரியம் புரிய ஆரம்பிக்கிறது.
இதனால் மக்கள் குறிப்பாக பெண்கள் இத்திட்டத்தில் இப்போது அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது வரை திசேரா மூலமாக ஒன்றரை மில்லியன் அலையாத்திக் கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. இரண்டு மில்லியன் நடுவது என்பதை லட்சியமாகக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார்.
`கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 40 ஆயிரம் ஹெக்டேர்
சதுப்பு நிலக்காடு இருந்தது. ஆனால், தொழில் வளர்ச்சி மற்றும் விறகுகளுக்காக சதுப்பு நிலக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அதனை முக்கியமான காரணமாக எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம் சிறப்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார், திசேரா. இன்று மக்களால் `மாங்குரோவ் மாஸ்டர்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment