பாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு
பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கும் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 176 வாக்குகளை பெற்றது.
எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் பிரிவின் பிரதமர் வேட்பாளர் ஷாபாஸ் ஷெரீஃப் 96 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
சபாநாயகர் முடிவை அறிவித்தபோது, நாடாளுமன்றத்தில் 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்ற முழக்கங்கள் எழுந்தன.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல்களில் மோசடி நடைபெற்றதாக பி.எம்.எல்-நவாஸ் கட்சி குற்றம் சாட்டியது.
நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையில், சனிக்கிழமையன்று இம்ரான்கான் பதவியேற்கவிருக்கிறார்.
அதே நேரத்தில் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்வில் பங்கேற்கவில்லை.
பாகிஸ்தான் பிரதான எதிர்கட்சியான முஸ்லிம் லீக்-நவாஸ் பிரிவின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மையப்பகுதியில் கூடி, கட்சித் தலைவர் ஷாபஸ் ஷெரிஃபுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர், அதற்கு பதில் முழக்கங்களை இம்ரான் கானின் கட்சியினரும் எழுப்பினார்கள்.
கூச்சல் குழப்பங்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் அவை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
இம்ரான் கான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடிய அவருடைய ஆதரவாளர்கள், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
நாடாளுமன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இடங்களில் இருந்து எழுந்து, பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்தவர்களை விமர்சித்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பார்வையாளர் அரங்கில் இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, பி.டி.ஐ கட்சி தலைவர் இம்ரான் கான், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
பாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு
Reviewed by Author
on
August 19, 2018
Rating:

No comments:
Post a Comment