ஆயுத போராட்டம் முடிந்தும் சமாதானம் ஏற்படவில்லை! சம்பந்தன் குற்றச்சாட்டு -
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ்காட்லாண்ட் அவர்களை சந்தித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் அவர்களிடம் இரா.சம்பந்தன் சுட்டிகாட்டியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன.
அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசாங்க கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒருபுதிய அரசியல்யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலை நாட்டுதல், நஷ்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொது மக்களின் காணிவிடுவிப்பு, மிக கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை, போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும்.
எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதிலும் இத்தகையான ஒரு பொருத்தம் இருக்கின்றது.
புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் பிரேரணையானது நாடாளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒருசில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரசாங்கதரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றது.
இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகம்கொடுத்தமைக்கு காரணங்கள் உள்ளன. ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து இப்பிரச்சினையை கையாளமுடியாது.
கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவற்றினை ஒருவர் கைவிடமுடியாது. அரசாங்கமானது உறுதியாக நின்று நாட்டினை சரியானபாதையில் நடத்த வேண்டும்.
மேலும் புதிய அரசியல் யாப்பின் உருவாக்கமானது நாட்டினை முன்னேற்றபாதையில் இட்டுச்செல்லும் மிகப்பாரிய ஒரு கருமமாகும். இந்த நாட்டில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தினையும் ஏற்படுத்துவதற்கு தனது முழுமையான பங்களிப்பு இருக்கும்.
இந்நிலையில், பொது நலவாயம் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதில் பங்குண்டு” என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆயுத போராட்டம் முடிந்தும் சமாதானம் ஏற்படவில்லை! சம்பந்தன் குற்றச்சாட்டு -
Reviewed by Author
on
August 04, 2018
Rating:

No comments:
Post a Comment