2018ஆம் ஆண்டு இலங்கையில் 9,344 கண்ணிவெடிகளை அகற்றிய அமெரிக்கா -
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க 2018ஆம் ஆண்டில் ஏறத்தாழ 600 மில்லியன் ரூபாய்களை உதவியாக வழங்கியுள்ளதாகவும், குறித்த பணிகளில் 9,344 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் பயனாளிகளை சந்திக்கும் நோக்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆயுதங்களை அகற்றுதல் மற்றும் தடுத்தல் தொடர்பான அலுவலகத்தின் தூதுக்குழுவொன்று ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018ஆம் ஆண்டில் ஏறத்தாழ 600 மில்லியன் ரூபாய்களை (3.5மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உதவியாக வழங்கியது. இதன் அங்கமான திட்டங்களையே அவர்கள் பார்வையிட வருகை தந்தனர்.
இந்தக் குழுவினர் மீள்குடியேற்ற அமைச்சு, தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு நிலையம் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவு ஆகியோரை சந்தித்திருந்ததுடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் ஆய்வுசெய்தனர்.
இந்த விஜயத்தின் போது கண்ணிவெடி அகற்றப்பட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற குடும்பங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
கண்ணிவெடி அகற்றப்பட்டமையால் தமது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் அறிந்து கொண்டனர்.
2018ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க நிதியுதவியுடன் 1.86 மில்லியன் சதுர மீற்றர்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதுடன், இவற்றிலிருந்து 9,344 கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
'2020ஆம் ஆண்டில் கண்ணிவெடித் தாக்கம் அற்ற நாடு என்ற இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றும் மூலோபாயத்திட்டம் மற்றும் இலக்குக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்' என இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் தெரிவித்தார்.
'மக்கள் தமது வீடுகள், வர்த்தக நடவடிக்கைகள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கு இந்தக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு உறுதுணையாக இருப்பதுடன், இது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கண்ணிவெடி ஆபத்தை நீக்குவதற்கு அமெரிக்கா 2002ஆம் ஆண்டு முதல் 9.5 பில்லியன் ரூபாய்களை (56 மில்லியன் அமெரிக்க டொலர்) வழங்கியுள்ளது.
அமெரிக்க நிதியுதவியின் பயனாக, இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டம் 2017ஆம் ஆண்டு கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய எட்டு மாவட்டங்களில் அவற்றை அகற்றும் முயற்சிகளுக்கு அமெரிக்க தொடர்ந்தும் நிதியுதவி வழங்கி வருகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் 664 கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
10 பேர் பங்குதாரரான உள்ள சமூக ஒற்றுமைக்கான டெல்வோன் சங்கம் மற்றும் சர்வதேச பங்காளரான ஹலோ ட்ரஸ்ட், மைன்ஸ் அட்வைசரி குரூப் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் இந்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருகிறது.
அமெரிக்காவின் நிதியுதவியின் பயனாக இலங்கை இராணுவத்தினருக்கு கண்ணிவெடி அகற்றுவதற்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிடைப்பதுடன், கண்ணிவெடி அகற்றுவதற்கு விசேடமாக பயிற்றப்பட்ட நாய்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
'ஸ்பிரிட் ஒவ் சொக்கர்' என்ற சர்வதேச பங்காளருடன் இணைந்து கண்ணிவெடி தொடர்பான அறிவூட்டல் திட்டத்துக்கும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது.
2018ஆம் ஆண்டு இலங்கையில் 9,344 கண்ணிவெடிகளை அகற்றிய அமெரிக்கா -
Reviewed by Author
on
October 24, 2018
Rating:

No comments:
Post a Comment