மன்னாரில்-சிவனும் -மடுமாதாவும் நல்லுறவின் குறியீடுகள்! -
சட்டங்களினாலும், நிர்வாக ஏற்பாடுகளினாலும் அரசியல் நடவடிக்கைகளினாலும், இனப்படுகொலைக் கலவரங்களினாலும், சிங்களக் குடியேற்றங்களினாலும், பொலிஸ்-இராணுவ நடவடிக்கைகளினாலும், இராணுவரீதியான பாரிய இனப்படுகொலை நடவடிக்கைகளினாலும் ஒருபுறம் இன அழிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
அதேவேளை தமிழ் பேசும் மக்களிடையே காணப்படக்கூடிய மத மற்றும் சாதி முரண்பாடுகளைப் பயன்படுத்தி அவர்கள் மத்தியில் மோதல்களை உருவாக்குவதன் மூலமும், பிரித்தாளும் தந்திரத்தைப் பிரயோகிப்பதன் மூலமும் இன அழிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படக்கூடிய எந்தொரு முரண்பாட்டையும் தனக்குச் சாதகமான வகையில் கையாள்வது எதிரியின் தொழிலாகும். இதனை இராஜதந்திர நெறிமுறையில் பிரித்தாளும் தந்திரம் என்று கூறுவர்.
இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையே காணப்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி இரு சமூகங்களுக்கும் இடையே பெரும் பகையை வளர்ப்பதில் பிரேமதாஸ அரசாங்கம் 1990களின் முற்பகுதியில் பெரு வெற்றியீட்டியது.
இதில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன தலையாய பாத்திரம் வகித்தார் எனத் தெரியவருகிறது. இதில் ஏற்பட்ட விரும்பத்தகாத விபரீதங்களை இந்துக்களும் - முஸ்லிம்களும் கடந்தாகவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இருதரப்பினருக்கும் உண்டு. அதற்காக முதலில் இந்துக்கள் தரப்பில் இருந்து நேசக்கரம் பெரிதாக நீள வேண்டியதும் அவசியம்.
தற்போது இந்துக்களுக்கும் - கிறிஸ்தவர்களுக்கும் இடையே மத பூசல்களை ஏற்படுத்தும் வகையில் கவலைக்கிடமான விடயங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. இந்துக்களுக்கும் - கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒருபோதும் அடிப்படையான பகைமை இருந்ததில்லை.
ஆங்காங்கே அரிதாக சில பூசல்கள் இருந்தாலும் அவை பகைமைத் தன்மைமிக்கவையாக ஒருபோதும் இருக்கவில்லை.
முரண்பாடுகள் தென்படும் போது பதவியில் இருக்கக்கூடிய ஒடுக்குமுறை புரியும் ஆட்சியாளர்கள் அதனை தூபமிட்டு வளர்ப்பார்கள் அல்லது பின்னணியாகவும் இருப்பார்கள்.
இதுவிடயத்தில் இருதரப்பினரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம். பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் தெற்கில் கிறிஸ்தவ – பௌத்த முரண்பாடுகள் பெரிதாக எழுந்த போதிலும் தமிழ் மண்ணில் அப்படி எந்தவித பகைமையும் இந்துக்களுக்கும் - கிறிஸ்தவர்களுக்கும் இடையே காணமுடியாது.
இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1883ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் மேற்கொண்ட கொட்டாஞ்சேனைக் கலவரமாகும். இதில் இரண்டு சிங்கள கிறிஸ்தவ பொது மக்களும், ஒரு பொலீஸாரும் கொல்லப்பட்டனர்.
ஆனால் இக்கால கட்டத்தில் வடக்கு – கிழக்குத் தழுவிய தமிழ் மண்ணில் இந்துக்களுக்கும் - கிறிஸ்தவ தமிழர்களுக்கும் இடையேயான உறவு பாலுக்குள் கலந்த சீனி போல் நல்நிலையில் இருந்தது.
கிறிஸ்தவ வேதாகம நூலான பைபிளை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் சைவத்துடனும், தமிழுடனும் தன்னை அடையாளப்படுத்திய ஆறுமுக நாவலர் என்பது கவனத்திற்குரியது.
அரசாங்க உத்தியோகத்தில் கண்ணாக இருந்த சைவத் தமிழர்கள் உத்தியோகத்திற்கான கல்வியை கிறிஸ்தவ மிஷனெரிக் கல்லூரிகளில் பெறும் பாரம்பரியம் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது.
உத்தியோகம், ஆங்கிலக் கல்வி, கிறிஸ்தவ மிஷனெரிகள் என்பன ஒன்றிணைந்தவாறு தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன. இந்நிலையில் தமிழ்ச் சைவர்கள் மத்தியில் கிறிஸ்தவ எதிர்ப்பு உருவாகுவதற்கான புறநிலைச் சூழல் சிறிதும் இருக்கவில்லை.
தற்போது கண் முன்னால் காணப்படும் ஒரு வரலாற்று உதாரணத்தை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. மானிப்பாயில் மருதடி விநாயகர் ஆலயம் உண்டு.
இந்த ஆலயம் ஒரு மருத மரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருந்தது. 19ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்திற்கு நேர்முன்னால் வெறும் 10 மீட்டர் தொலைவில் தென்னிந்திய திருச்சபை ஒரு தேவாலயத்தைக் கட்டியது.
இந்நிலையில் இந்து பிள்ளையார் கோவிலும், கிறிஸ்தவ தேவாலயமும் எதிரும் புதிருமான நிலையில் காணப்பட்டன.
ஆனாலும் இந்துக்களும் - கிறிஸ்தவர்களும் இங்கு மோதலில் ஈடுபடவில்லை. கிழக்கு வாசலைக் கொண்டிருந்த விநாயகர் கோவிலில் மருத மரத்தடியில் கிழக்கே பார்த்தவாறு இருந்த விநாயகத் தெய்வச்சிலை ஒருநாள் அதிகாலை மேற்கே பார்த்தவாறு காட்சியளித்தது.
அதைத் தொடர்ந்து கோவில் வாசலை மேற்கே திருப்பி இன்றுவரை அது மேற்கு வாசலாகவே உள்ளது. இதன் மூலம் இரண்டு மத பிரிவிற்கும் இடையே சண்டை ஏற்பட முடியாத ஒரு சமரசத்தை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இது கையாளப்பட்டது.
இந்த இடத்தில் பெரும்பான்மை இனமான இந்துக்கள் மதப்பொறையை இதன் அடிப்படையில் பெரிதும் முன்னெடுக்கும் நிலை உருவானது.
குறிப்பாக குடா நாட்டில் மிகப்பெருமளவில் இந்துக்கள் வாழும் சூழலிலேயே கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இங்கு இந்துக்கள் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழிபடச் செல்லும் பாரம்பரியம்
வளர்ச்சியடைந்திருப்பதைக் காணலாம். ஒரு கிறிஸ்தவ தேவலாயமாவது தாக்கப்பட்டது கிடையாது. மாறாக பயபக்தியுடன் அவை பேணப்படும் நிலையே உண்டு.
குடாநாட்டில் இளவாலையில் கிறிஸ்தவ உயர்சாதியினருக்கும், கிறிஸ்தவ ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இரண்டு சாதிப்பிரிவினருக்கும் தனித்தனியே இரண்டு கிறிஸ்தவ
தேவாலயங்கள் உருவாகின. இங்கு ஒரு மதத்திற்குள் சாதியால் சண்டை நடந்ததே தவிர இரு சமய பிரிவுகளுக்கு இடையேயான சண்டை நிகழவில்லை. அதேபோல இந்துக் கோவில்களுக்குள்ளும் சாதிச் சண்டைகள் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள – பௌத்தர்கள் மத்தியில் குறிப்பாக டொனமூர் அரசியல் யாப்பைத் தொடர்;ந்து கிறிஸ்தவம் பெரும் சவாலுக்கு உள்ளாகியது. இங்கு உயர்சாதி சிங்களவர்கள் ஆட்சியாளர்களின் மதமான ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்தை பெரிதும் தழுவியிருந்தனர். ஆனால் டொனமூர் யாப்பின் மூலம் உருவான அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஏற்பாட்டின் கீழ் பெரும்பான்மையினரான பௌத்தர்களின் தயவில் தங்கி நிற்கவேண்டி அவசியம் தலைவர்களுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள் அடியோடு பௌத்தத்திற்கு மாறும் போக்கு உருவானது.
குறிப்பாக பண்டாரநாயக்க குடும்பம் அங்கிலிக்கன் கிறிஸ்தவத்தில் இருந்து பௌத்தத்திற்கு மாறிய போது பண்டாரநாயக்கவை டொனமூர் பௌத்தன் என அழைத்தனர்.
இது பெரும்பான்மையான சிங்களத் தலைவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இப்பின்னணியிற்தான ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மதம் மாறும் போக்கை தடுப்பதற்கு ஓர் உபாயமாக சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு என்ற 29வது சரத்தை சோல்பரி தனது யாப்பில் உருவாக்கியதாக ஒரு கருத்து உண்டு.
உண்மையில் சிங்கள – பௌத்தர்களிடமிருந்து அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களை பாதுகாப்பதற்கான ஓர் உளவியல் அரசியல் ஏற்பாட்டை சோல்பரி மேற்கொண்ட போதிலும் அது தெளிவாகத் தோல்வியில் முடிந்தது.
ஆனால் தமிழ் மக்கள் தரப்பில் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. குறிப்பாக 30 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு தொடர்ந்து தலைவராக கிறிஸ்தவரான திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காணப்பட்டார். அக்காலத்தில் சந்தனப் பொட்டுடன் மேடைகளில் காட்சியளித்த ஜி.ஜி.பொன்னம்பலத்தை நிராகரித்து கிறிஸ்தவரான செல்வநாயகத்தை தனிப்பெரும் தலைவராக்கி 20 ஆண்டுகளாக அவரைத் தமிழ் மக்கள் ஏகத் தலைவனாகப் பேணினர்.
இது வெறும் தனிப்பட்ட மனிதன் சார்ந்த விடயமல்ல. முழுத் தமிழ் மக்களினதும் மனநிலை சார்ந்த விடயம்
செல்வநாயகத்திற்கு முன் 1930 களின் முற்பகுதியில் தமிழ் மக்களின் தலைவராகக் காட்சியளித்த தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவரான ஹண்டிப் பேரின்பநாயகம் கிறிஸ்தவராக இருந்த போதிலும் அநேகமாக வெள்ளிக்கிழமைகளில் வேட்டி அணிந்தவாறு மேற்சட்டை அணியாமல் மருதடி விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
இங்கு ஒரே வேளையில் அவர் கிறிஸ்தவனாகவும், வழிபாட்டில் அவர் ஒரு இந்துவாகவும் வாழ்ந்துள்ளார் என்ற உண்மை பலருக்கும் வியப்பைத் தரவல்லது.
சிங்களத் தரப்பில் கிறிஸ்தவத்தைப் பாதுகாத்து வருவது சோல்பரியின் 29வது சரத்தல்ல. இங்கு ஒரு விசித்திரமான வரலாற்று உண்மை கவனத்திற்குரியது.
உயர்சாதியினரான ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் அரசியல் நலனுக்காக மீண்டும் பௌத்தத்திற்கு மதம் மாறிய போது அரசியல் அதிகாரத்திற்கு வரமுடியாத சாதித் தடையைக் கொண்டிருந்த சிங்கள “கரவ” சாதியினர் மத்தியில் காணப்படும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மீண்டும் பௌத்தத்திற்கு மாறவில்லை.
போர்த்துக்கீச அடியைக் கொண்ட பெரேரா, சில்வா, பெர்ணான்டோ, சொஸ்ஸா போன்ற ரோமன் கத்தோலிக்கப் பெயர்களைக் கொண்ட “கரவ” சாதியினர் தொடர்ந்தும் கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையே புறநிலை யதார்த்தமாய் அமைந்தது.
அதாவது மீண்டும் பௌத்தத்திற்கு மதம் மாறினாலும் அவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரமுடியாத சாதித்தடை சிங்களச் சமூத்தில் பலமாக இருந்ததால் அத்தகைய சமூகத் தட்டைக் கொண்ட மக்கள் மீண்டும் பௌத்தத்தறிகு மதம் மாறாதிருக்கும் நிலையே காணப்பட்டது.
சுதந்திரத்தின் பின் படிப்படியாக, குறிப்பாக பண்டாரநாயக்காவின் தலைமையிலான இரண்டாவது பௌத்த மறுமலர்ச்சியின் பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பிரிவினரும் முழுயாக அரசியல் வலுவை இழந்துவிட்டனர்.
பண்டாரநாயக்க 1959ஆம் ஆண்டு வெளிநாடு செல்ல நேர்ந்த போது அவர் தனக்கு அடுத்து கட்சியின் தலைவராக இருந்த கரவ சாதியைச் சேர்ந்த சி.பி.டி.சில்வாவை பதில் பிரதமராக நியமிக்காமல் அதுவும் தனது கட்சிக்காரர் அல்லாத பாஷா பெரமுனக் கட்சியின் தலைவரான கொய்கம சாதியைச் சேர்ந்த டபுள்யூ. தகநாயக்கவை பதில் பிரதமராக நியமித்தார் என்பது சிங்கள மக்கள் மத்தியில் இருந்த சாதி அரசியலின் பலத்தைக் காட்டி நிற்கின்றது.
தமிழ் மண்ணில் நிலைமை இதற்கு முற்றிலும் மாறாக அமைந்திருப்பதை காணலாம். அரசியல் தலைவரான செல்வநாயகம் மட்டுமன்றி அறிவியல் அரங்கில் வண. தனியாகம் அடிகளார் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பொறுத்து ஒரு தலையாயத் தூணாகத் தமிழ் மக்கள் மத்தியில் மதிக்கப்படுகிறார்.
மேலும் கத்தோலிக்க திருச்சபை தமிழ்ப் பண்பாட்டை தன்னகத்தே இணைக்கும் இயல்பை வெளிப்படுத்த pஉள்ளது. இந்துக்கள் அணியும் சந்தனப் பொட்டு அணிவதை மதத்திற்கு அப்பால் ஒரு பண்பாட்டு அம்சமாக அவர்கள் ஏற்றுப் பின்பற்றுகின்றனர்.
அவ்வாறே கும்பம் வைத்தலையும் மதத்திற்கு அப்பாலான பண்பாட்டு விடயமாக ஏற்று பின்பற்றுகின்றனர். மேலும் தைப் பொங்கலை மதத்திற்கு அப்பால் தமிழரின் பண்பாட்டு விழாவாக கத்தோலிக்கர்கள் ஏற்று தாமும் அதன் வழி ஓரளவு செயற்படுகின்றனர்.
இவையெல்லாம் மத நல்லுறவை வளர்ப்பதற்கான கட்டியங்களாகும்.
2002ஆம் ஆண்டு வன்னியில் விடுதலைப் புலிகளின் ஒரு தொகையினர் தைப்பொங்கல் அன்று பால் பொங்கலுக்குப் பதிலாக கோழிப் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர். இதில் பல நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் போராளிகளும் மற்றும் பொதுமக்களும் அடங்குவர்.
ஆனால் இதைக் கண்டு சைவர்கள் கொதிப்படைந்ததைவிட ஒரு கிறிஸ்தவ மதகுரு பெரிதும் கொதிப்படைந்து இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திற்கு கடிதம் எழுதினார்.
உடனடியாக அக்கடித்திற்கு மதிப்பளிக்கப்பட்டு அந்தக் கோழிப் பொங்கலோடு சம்பந்தப்பட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பாளர் பதவிகளும், கூடவே வண்டி வாகனங்களும் பறிக்கப்பட்டன.
இங்கு சைவத்தின் புனிதத்தை பாதிக்கக்கூடாது என்று கோரி முன்னின்று செயற்பட்டவர் ஒரு கிறிஸ்தவ மதகுரு என்பதும் அதற்குத் தலைமைப் பீடம் மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டதும் பெரிதும் கவனத்திற்குரிய விடயங்களாகும்.
கிறிஸ்வதவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நல்லுறவு மிகச் சிறந்த முன்னுதாரணத்துடன் தமிழ் மண்ணில் காணப்படுகிறது. இதனை மேலும் வளர்க்க வேண்டுமே தவிர இதில் காயம் ஏற்பட இரு தரப்பினரும் இடமளிக்கக்கூடாது.
இலங்கையில் பாடல் பெற்றத் தலங்களாக திருக்கேத்தீஸ்வரமும், திருக்கோணஸ்வரமும் உண்டு. மேலும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நகுலேஸ்வரமும் உண்டு.
கிறிஸ்துவிற்கு முற்பட்ட 1000ஆம் ஆண்டை எட்டக்கூடிய பெருங்கற் பண்பாட்டு வழிபாட்டு முறையை கொண்டிருக்கும் செல்வச் சன்னதி முருகன் கோவில் உண்டு. இவை யுத்த காலத்தில் ஓரளவு நலிவுற்றுள்ளன.
இவ்வாலயங்களை வெறுமனே மத வழிபாட்டோடு மட்டும் அடையாளங் காணாமல் வரலாற்றுத் தொன்மை, மற்றும் பண்பாட்டு மூலம் என்பவற்றோடு எல்லாம் இணைத்துப் பார்க்க வேண்டிய ஓர் அறிவியல் வரலாற்று அணுகுமுறையும் அவசியம்.
செல்வச் சன்னதி முருகன் கோவிலில் 2000க்கும் மேற்பட்ட ஆண்டிற்குரிய பெருங்கற் பண்பாட்டின் குரலை அங்கு காணலாம். வழிபாட்டு முறையிலும், பூசை வைத்தலிலும் இவை தெளிவாகத் துலங்கும். வழமையாக கோவில்களில் உண்டியல்கள் நிரம்புதுண்டு.
ஆனால் செல்வச் சன்னதியில் உண்டியல் நிரம்பாது மாறாக பத்தர்களின் வயிறுதான் நிரம்பும். இவையெல்லாம் மிகவும் ரசனைக்குரிய வரலாற்று படிமங்களாக உள்ளன.
கிழக்கில் காணப்படும் வழிபாடுகளிலும் இத்தகைய பெருங்கற் பண்பாட்டு தொடர்ச்சிகளைக் காணலாம்.
மன்னார் மாவட்டத்தில் மடுத் தேவாலயமும், திருக்கேதீஸ்வரமும் காணப்படுகின்றன. இவை இரண்டிற்குமென வரலாற்று, மற்றும் சமூகச் சிறப்புக்கள் உண்டு. மடுத் தேவாலயத்திற்கு இந்துக்கள் வழிபடச் செல்வது வழக்கம்.
ஒருவகையில் இந்துக்கள் மடுமாதாவை ஓர் இந்து அம்மன் போல மனதார நினைத்து வழிபடும் நிலையும் இங்கு கவனத்திற்குரியது.
இவ்வகையில் மடுத் தேவலாயத்தின் முக்கியத்துவத்தையும், பாடல் பெற்ற திருக்கேத்தீஸ்வரர் ஆலாயத்தின் முக்கியத்துவத்தையும் இணைத்து இங்கு மத நல்லுறவிற்கு வழி தேட வேண்டுமே தவிர முரண்பாடுகளுக்கு இதனை மையமாக்கிக் கொள்ளக் கூடாது.
இதுவிடயத்தில் அரசியல் தலைவர்களும், இருதரப்பு மதகுருக்களும் மற்றும் மதத் தலைவர்களும், அறிஞர்களும், ஊடகவியலாளர்களும் ஆக்கபூர்வமான வகையில் நல்லுறவை மேலும் வலுவாக்குவதற்காக உழைக்க வேண்டியது அவசியம்.
மன்னாரில்-சிவனும் -மடுமாதாவும் நல்லுறவின் குறியீடுகள்! -
Reviewed by Author
on
March 18, 2019
Rating:

No comments:
Post a Comment