சஹரானுடன் உள்ள தொடர்பை சாட்சியுடன் விமல் நிரூபிக்க வேண்டும் – ரிஷாட் சவால்!
சஹரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு தான் உதவியதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு முதுகெலும்பு இருந்தால் அதனை சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் தன்மீது பல பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
அதன்பின்னர் ஊடகவியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “எனது அமைச்சுக்கு கீழான சதொச நிறுவனத்தின் வாகனங்கள் சஹரானின் நாசகார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவரது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நான் உதவியதாகவும் விமல் வீரவன்ச முழுப்பொய்யை கூறியதுடன், கிளிப்பிள்ளைப் போன்று திரும்பத் திரும்ப அதே பொய்யை பரப்புகின்றார். விமலுக்கு முதுகெலும்பு இருந்தால் இதனை சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறு சவால் விடுகிறேன்.
அதேபோன்று 52 நாட்கள் அரசாங்கத்துக்கு எனது உதவியைக் கேட்டு, அது சாத்தியப்படாததால் விரக்தி அடைந்த எஸ்.பி.திஸாநாயக்கவும் ஊடகங்களில் வந்து தினம் தினம் பொய்களை கக்குகின்றார். இவ்விருவரும் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நப்பாசையிலேயே இந்த பொய்யான கருத்துகளைக்கூறி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட கடும்போக்கு பயங்கரவாதிகளை உசுப்பேற்றியவர்களும் இவர்களே.
நாட்டில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படக்கூடாது என்ற உண்மையான எண்ணத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளைத் தூக்கி எறிந்து, போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான சுயாதீன விசாரணைக்கு வழிவகுத்துள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சஹரானுடன் உள்ள தொடர்பை சாட்சியுடன் விமல் நிரூபிக்க வேண்டும் – ரிஷாட் சவால்!
Reviewed by Author
on
June 08, 2019
Rating:

No comments:
Post a Comment