திறமையினை மனம் விட்டுப்பாராட்ட வேண்டும்-செழுங்கலை வித்தகர் செபஸ்தியான் சீமான்
கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மைக்காண வருகின்றார் நாட்டுக்கூத்த நடிகர் பாடகர் செழுங்கலை வித்தகர் மற்றும் அரங்க வேந்தன் விருது பெற்ற செபஸ்தியான் சீமான் அவர்களின் அகத்திலிருந்து.
தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் முருங்கன் தற்போது முருங்கன் பிட்டியில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சமூக கலைச்சேவையில் ஈடுபாட்டு 94வயதில் முதுமையின் நிமித்தம் ஓய்வில் இருந்து வருகின்றேன.
தங்களின் கலைப்பயணத்தின் தொடக்கம் பற்றி-
எனது கலைப்பயணம் எனும் போது எனது தந்தை மரியான் செபஸ்தியான நாட்டுக்கூத்து அண்ணாவியார் செ.செபமாலை தாயும் எனது தம்பி செ.செபமாலை(குழந்தை) செ.யேசுதாசன் தம்பி மிருதங்க வித்துவான் ஏனையோரும் இப்படியாக கலைக்குடும்பத்தைச்சார்ந்தவர்கள் ஆதலால் எனக்கு சின்ன வயது இருக்கும் போதே நானும் எனது தம்பியும் தந்தையுடன் செல்வோம் பரம்பரைபரம்பரையாக தொடர்கின்றது கலைப்பயணம்….
தங்களின் முதல் நாடகம் பற்றி---
எனது சிறுபருவத்தில் நடித்திருந்தாலும் எனது இளமைப்பருவத்தில் சந்தோமையார் வாசாப்பு நாடகத்தினை 1950ம் ஆண்டு எமது புனித இயாகப்பர் ஆலயத்தில் மேடையேற்றும் போது நான் குமாரனாக நடித்திருந்தேன் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது கலைப்பயணம்.
தங்களின் கல்விக்காலம் பற்றி---
நான் தான் எங்கள் வீட்டில் மூத்தவன் ஆதலால் கல்வியை நான் பெரிதாக நோக்காமல் விவசாயத்தினையும் நாடகத்தினையும் தேர்ந்தெடுத்தேன் அக்காலத்தில் இவைதான் பெரிய விடையம்கள் எனது தந்தை மரியான் செபஸ்தியானட நாட்டுக்கூத்து அண்ணாவியார் அப்புவுடன் சேர்ந்து கமத்தொழிலாகவும் நாடகத்தினை கலையார்வத்துடன் செயற்பட்டதால் நாடகமே வாழ்க்கையாகிவிட்டது அனுபவகல்வியும் இறைநம்பிக்கையும் என்னை வழிநடத்துகின்றது. எனலாம்.
தங்களது முதல் கலைமன்றம் பற்றி---
எனது தம்பி செ.செபமாலை(குழந்தை) மற்றும் இளைய சகோதரர்கள் நானும் இணைந்து இயாகப்பர் இன்னிசைக்கலாமன்றம் ஒன்றை உருவாக்கினோம் ஆனாலும் அது ஒரு குறிப்பிட்ட சாரருக்கான மன்றமாகவே மக்களால் உணரப்பட்டது அதையுணர்ந்து கொண்டு நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மன்றமாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் என்று பெயர்மாற்றம் செய்தோம் அதன் பின்பு எல்லோரும் கூட்டாக ஒன்றிணைந்தார்கள் மிகவும் சிறப்பாக செயலாற்றினோம் எமது மன்றத்தின் முதல் நாடகம் பாட்டாளிக்கந்தன் விவசாய விழா மற்றும் கூட்டுறுவு விழாவில் இந்த நாடகத்தினை அரங்கேற்றினோம் அமோக வரவேற்பினை பெற்றது.
இப்படியாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றம் தொடர்ச்சியாக பிரதேசவாரியாக மாவட்ட வாரியாகவும் தேசியத்திலும் போட்டிகளில் பரிசுகளையும் கௌரவத்தினையும் பெற்றோம் வீரத்தாய்-யார்குழந்தை-கல்சுமந்த காவலர்கள் இந்த மூன்று நாடகங்களும் இன்னும் பல நாடகங்கள் மாறி மாறி மேடையேற்றினோம். அப்போது கலையரசு விருது பெற்ற சொக்கலிங்கம் DRO இருந்தார்.
இந்த நாட்டுக்கூத்துக்கலையை எப்படி காத்துக்கொள்ள முனைகின்றீர்கள்------
கலைக்குடும்பம் எனும் கலையார்வம் இயல்பானதே…நல்லதொரு கேள்வி இக்கலையை எனது தலைமுறையோடு அழிந்து போகாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதென்றால் என்னிடம் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து இக்கலையினை கேட்டு அறிந்தும் ஆய்வு செய்பவர்களிடம் நான் கூறும் விடையம் எல்லோருக்கும் தெரியும் படியும் அறியவும் செய்ய வேண்டும் என்பதே ஆனால் அந்த மாணவர்களின் இலக்கு அந்தப்பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே தவிர கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் இல்லை…கவலையாக உள்ளது.
தற்கால இளைஞர்கள் யுவதிகளுக்கு தங்களின் ஆலோசனை----
நான் கலைக்குடும்பத்தினைச்சார்ந்தவன் நான் கூடுதலாக ஹாசியமாக பேசுவேன் நான் சந்தோஷமாகத்தான் இருக்கின்றேன் மற்றவர்களையும் சந்தோஷமாகத்தான் இருக்கவைப்போம். பிறரின் மகிழ்ச்சியில் தான் எனது மகிழ்ச்சி உள்ளது. பெரியவர்களை மதிக்கவேண்டும் திறமையினை மனம் விட்டுப்பாராட்ட வேண்டும்.
எமது பாரம்பரியம் எமது இளையதலைமுறையினரிடம் தான் உள்ளது அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் உரிமையுடன் செலலாற்றவேண்டும்.
கலைப்பணி ஆற்றிய மன்றங்கள் பற்றி---
இயாகப்பர் இன்னிசைக்கலாமன்றம
முருங்கன் முத்தமிழ் கலாமன்றம்
மன்னார் திருமறைக்கலாமன்றம்
மன்னார் தமிழ்ச்சங்கம்
முருங்கன் புனித இயாகப்பர் ஆலய சபை
நீங்கள் நடிகனாக பங்கேற்ற நாடகங்களும் நாட்டுக்கூத்துகளும் பற்றி---1950-2019---
- பாட்டாளிக்கந்தன் உரைப்பாங்கு நாடகம்1961
- நல்வாழ்வு இசைநாடகம்-1961
- வெனிஸ் வர்த்தகன்
- வீரத்தாய்- நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- புதுமைப்பெண் இசைநாடகம்-1967
- கல்சுமந்த காவலர்கள் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1967
- யார் குழந்தை நாட்டுக்கூத்து மரபு நாடகம்1969
- அன்புப்பரிசு இசைநாடகம்-1968
- திருப்பாடுகளின் காட்சி
- சந்தியோகுமையோர் நாடகம்
- சாம்ராட் அசோகன்
- சில்வேஸ்த்திரியார் நாட்டுக்கூத்து
- கனவு கண்ட கதாநாயகன்
- நவீன விவசாயம் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- யோசசவ்வாஸ் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1966
- இணைந்த உள்ளம் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- நளன் தமயந்தி நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- அல்லி நாட்டுக்கூத்து மரபு நாடகம்1967
- யப்பானிய முறை விவசாயம் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1968
- தாரும் நீரும் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1972
- குண்டலகேசி நாட்டுக்கூத்து மரபு நாடகம்1973
- இறைவனா…புலவனா… நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- விடுதலைப்பயணம் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1978
- கவிரி வீசிய காவலன் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1980
- காதல் வென்றது நாட்டுக்கூத்து மரபு நாடகம்1980
- மயான காண்டம் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1982
- வீரனை வென்ற தீரன் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1983
- புனித செபஸ்தியார் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- 1985
- புனித லூசியா நாட்டுக்கூத்து மரபு நாடகம்1964
- பூதத்தம்பி நாட்டுக்கூத்து மரபு நாடகம்1992
- காவல் தெய்வங்கள நாட்டுக்கூத்து மரபு நாடகம்1995
- ;அழியாத வித்துக்கள் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1995
- அன்று சிந்திய இரத்தம் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1966
- எரிந்த மெழுகுவர்த்திகள் நாட்டுக்கூத்து மரபு நாடகம்1966
- கள்;வனை வென்ற காரிகை இசைநாடகம்-1964
- மனமாற்றம இசைநாடகம்-1962
- தோரணமாளிகை இசைநாடகம்-1967
- திருந்திய கமக்காரன் இசைநாடகம்-1967
- புதுமைப்பெண் இசைநாடகம்-1967
- முதல் குடும்பம் இசைநாடகம்-1975
- சிலம்பின் சிரிப்பு இசைநாடகம்-1975
- சின்னவன் வென்றான் இசைநாடகம்-1980
- ஒளி பிறந்தது இசைநாடகம்-1985
- ஞான சவுந்தரி இசைநாடகம்-1992
- இறைவனின் சீற்றம் இசைநாடகம்-1972
- பணத்திமிர் உரைப்பாங்கு நாடகம்1961
- திருந்திய உள்ளம் உரைப்பாங்கு நாடகம்1961
- இலட்சிய வாதிகள் உரைப்பாங்கு நாடகம்1962
- தியாகிகள் உரைப்பாங்கு நாடகம் 1963
- பணமா…?கற்பா..? உரைப்பாங்கு நாடகம்1965
- வாடிய மலர் உரைப்பாங்கு நாடகம்1967
- என்று தணியும் உரைப்பாங்கு நாடகம்1970
- மலர்ந்த காதல் உரைப்பாங்கு நாடகம்1970
- பாசத்தின் பரிசு உரைப்பாங்கு நாடகம்1970
- உலகின் ஒளி உரைப்பாங்கு நாடகம்1976
- பாலுணவு உரைப்பாங்கு நாடகம்1980
- ஒரு மலர் சிரித்தது உரைப்பாங்கு நாடகம்1980
- மறைந்த இயேசு உரைப்பாங்கு நாடகம்1980
- தாகம் உரைப்பாங்கு நாடகம்1992
- நல்ல முடிவு உரைப்பாங்கு நாடகம்1994
- இப்படியும் மனிதர்கள உரைப்பாங்கு நாடகம்1995;
- விண்ணுலகில் நாம் உரைப்பாங்கு நாடகம்1995
- சமாதானம் மலரட்டும் உரைப்பாங்கு நாடகம்2002
- ஏகலைவன்-உரைப்பாங்கு நாடகம்2005
- ஓற்றுமையின் சிகரம் உரைப்பாங்கு நாடகம்
- கண்ணகி உரைப்பாங்கு நாடகம்
- இயாகப்பர் உரைப்பாங்கு நாடகம்
- வாழவைப்போம்-நாட்டிய நாடகம்-1968
- ஒளியை நோக்கி-கவிதை நாடகம்-1990
- ஒளி உதயம் ;-நாட்டிய நாடகம்-1985
- கண்ணகி-நாட்டிய நாடகம்-1972
தாங்கள் கலை வாழ்வில் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களும் படைப்புக்களும்---
சிறுவயதில் இருந்தே நாட்டுக்கூத்து, நாடகம்,வில்லுப்பாட்டு கவிதைகள் போன்றவற்றிலும் மிகச் சிறந்த குணச்சித்திரநடிகர், நகைச்சுவை நடிகர் மிக இனிமையாகப் பாடுவேன் சிம்மக்குரலோன் என்பார்கள் அரசனாக.மந்திரியாக,அமைச்சனாக,முனிவராக நடித்ததுமட்டுமல்லாது பல சந்தர்ப்பங்களில் பெண்களின் பாத்திரங்களைப் பெண்கள் ஏற்று நடிக்காத சூழலில் பெண்பாத்திரங்களானஅரசி,தோழி,மருத்துவிச்சி போன்ற பாத்திரங்களை ஏற்று மிகச் சிறப்பாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டேன்.
தங்களது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள் பற்றி---
நிறையவுள்ளது அதில் சிலவற்றினை சொல்கின்றேன்
- ஒரு முறை அயல்கிராமத்திற்கு நாடகம் கொண்டு செல்வதற்கு தயாராகி இரவு புறப்படும் நேரம் எனது மனைவி நிறைமாதக்கர்ப்பினியாக இருக்கின்றாள் அச்சந்தர்ப்பத்தில் இறைவன் மீது பாரத்தினை இறக்கிவைத்துவிட்டு நான் நாடகம் கொண்டு போய்விட்டோம் அப்போது மின்சாரம் இல்லை கைவிளக்கு மற்றும் லாம்புதான் நாடகம் மேடைறே;றி நிறைவுபெறும் நேரம் ஒரு நண்பர் ஓடிவருகின்றார் என்னை நோக்கி சீமான் சீமான் உனக்கு பிள்ளை பிறந்திற்று ஆண்பிள்ளை என்று சொல்கின்றார் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நாடகம் முடிந்து வீடுசென்று பார்க்கின்றேன் அத்தருணம்….
- 1972ம் ஆண்டு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நாடகவிழா ஒன்று நடந்தது 32 நாடகங்கள் போட்டிக்கு வந்தன ஏறக்குறைய 07 நாட்கள் நடந்தது மன்னாரில் இருந்து எமது முத்தமிழ் கலாமன்றம் ஒன்றுதான் வந்தது அங்கு எமது நாடகமான அன்புப்பரிசு நாடகத்தினை மேடைறறினோம் 32 நாடகங்ஙளில் 06நாடகத்தினை தெரிவு செய்தார்கள் அதில் எங்களுடைய அன்புபரிசு நாடகம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.பரிசும் பெற்றது.
- நானாட்டானில் சொக்கலிங்கம் ஐயா உதவி அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் அடிக்கடி நாடக விழாக்கள் வைச்சார் ஒரு தடவை நானாட்டானில் ஒரு நாடக விழா நடந்தது இறைவனா…? புலவனா...? என்ற நக்கீரரின் கதையை நாடகமாக தம்பி செ.செபமாலை(குழந்தை)யின் உருவாக்கத்தில் நான் நக்கீரனாக நடித்தேன் நாடகத்தில் ஒரு இடத்தில் தீப்பொறி பறக்கவேண்டும் அதற்கு பொறுப்பாக தங்கராசா தான் (அமரர் திரு.தங்கராசா என்பவர் முருங்கனை சேர்ந்தவர் மண்ணெண்ணையை வாய்க்குள் ஊதி நெருப்பு உண்டாக்கனும் அப்படி வாறபோது என்னுடைய உடுப்பில் தீப்பற்றிக்கொண்டு எரி;கின்றது நான் நடிப்ப விடயில்ல தம்பி செபமாலை குழந்தை பாட்ட விடயில்ல (கண்களில் ஆனந்தக்கண்ணீர் )என்னண்டு விடுறது தொடர்ந்து நடிச்சதுதான் அங்கு இருந்த அரைவாசிச்சனம் எழும்பி ஓடிற்றுதுகள் நாடகம் என்றால் எனக்கும் தம்பி செபமாலை குழந்தைக்கும் அவ்வளவு பெருவிருப்பம் நாய்குட்டிபோல நாடகம் நடக்கின்ற இடங்களுக்கு போய்விடுவம் நாங்களும் நாடகம் போடுவம் அப்படி அருமையான பசுமையான காலங்கள் அவை ஒன்று இரண்டல்ல ஏராளம்….
தங்களின் கலைச்சேவையை பாராட்டி வழங்கப்பட்ட பட்டங்களும் விருதுகளும் பற்றி---
எனக்கு பெரிதாக பட்டங்களும் விருதுகளும் கிடைக்கவில்லை அதற்கு நான் முயற்சிக்கவும் இல்லை இருந்தாலும் என்னைப்பலமுறை கௌரவப்படுத்தியுள்ளார்கள் அவற்றில் சமீபத்தில் பெற்றுக்கொண்ட விருதுகளாக
- 2012-10-07 அரங்க வேந்தன் விருதும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர் முருங்கன் முத்தமிழ் கலாமன்றம்-மன்னார்.
- 2017-12-22 செழுங்கலை வித்தகர் விருதும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர்-கலாசார பேரவை நானாட்டான் பிரதேச செயலகம் மன்னார்.
இருவருமே சொன்ன விடையம் எமது தந்தை செ.செபமாலை குழந்தை மாஸ்ரர் அவர்களின் இத்தனை வாழ்நாள் கலைவாழ்வில் ஒன்றாக இணைந்து எல்லாச்சந்தர்ப்பத்திலும் உறுதுணையாக இருந்தவர்களில் எமது பெரியப்பா முதன்மையானவர் எனலாம் எமது தந்தையின் வெற்றிச்சாதனைகள் அனைத்திலும் பெரியப்பாவிற்கும் பங்குண்டு எந்த வித பிரதியுபகாரமும் பார்க்காமல் தனது வாழ்க்கையை ஆயூளையே கலைக்காக அர்ப்பணித்து செயல்ற்றிய செயல் வீரன் எமது பெரியப்பா எனலாம்.
இயல்பாகவே இறைபக்தியும் இரக்ககுணமும் கொண்டவர் ஆதலால் எல்லோருடனும் இன்முகத்துடன் பழகுவதிலும் நகைச்சுவையாக பேசுவதிலும் எச்சந்தர்ப்பத்திலும் தன்னை சூழலோடு இணைத்து செயலாற்ற வல்லவர்.பிறர் துன்பம் கண்டு வருந்துபவர் ஒரு குடும்பத்தின் சாப்பாட்டு தேவைக்காக தான் நாட்டாமை வேலை செய்து அக்குடும்பத்தினை பராமரித்தவர் என்றால் பாருங்கள்.
இப்படி அவரின் பண்பையும் ஆளுமையினையும் எமது சிறுவயதில் இருந்து கண்டுவருகின்றோம். நாட்டுக்கூத்துக் கலைஞர்திருவாளர்சீமான் அவர்களின்பங்களிப்புஅனைத்துக் கலைநிகழ்வுகளிலும் இடம்பெறுகின்றஅளவுக்கு இவரின் கலைப் பங்களிப்பு இருந்திருக்கின்றது.நடிகர்கள் தட்டுப்பாடானசந்தர்ப்பங்களில் இவரின் பங்களிப்புமெச்சத்தக்கது.இவரின் முதுமையினால் இப்போது நடிக்க பாட முடியாவிட்டாலும் தனது ஊக்குவிப்பினால் மன்ற இளையோரை உற்சாகப்படுத்தி வருவதோடுதமதுமக்கள் பேரப்பிள்ளைகளை இத்துறையில் ஈடுபட உற்சாகம் அளித்து வருபவர்.
மன்னார் மக்களின் கலைஞர்களின் திறமைகளையும் அற்றலையும் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து---
மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் எல்லா வகையான வளமும் திறமைமிகுந்த கலைஞர்களும் இருக்கின்றார்கள் அவர்களின் திறமைகள் அவரவர் கிராமங்களோடு நின்றுவிடுகின்றது. தங்களின் நேர்காணல் மூலம் இலைமறை காயாக இருக்கின்ற கலைஞர்களையும் எம்மைப்போன்ற முதிய கலைஞர்களையும் வெளிக்கொணர்வது கலைஞர்களுக்குரிய பெரிய கௌரவமாகும். இச்நச்செயலை செய்யும் உங்களுக்கும் நியூமன்னார் இணையத்தின் நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு-கவிஞர்-வை-கஜேந்திரன் BA
திறமையினை மனம் விட்டுப்பாராட்ட வேண்டும்-செழுங்கலை வித்தகர் செபஸ்தியான் சீமான்
Reviewed by Author
on
July 20, 2019
Rating:

No comments:
Post a Comment