ஈழத்தமிழர் தேசத்தின் வலிமைக்கான வாயிலாக எழுகதமிழ் மாறுமா ?
இது, 1983 கறுப்பு யுலையின் பட்டறிவு தனக்கு உணர்த்திய செய்தியென விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நிதர்சனத்தின் வீடியோ மஞ்சரி ஒன்றில் அன்று தெரிவித்திருந்ததாக கட்டுரையாசிரியர் சுதன்ராஜ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாங்கள் எப்பொழுதுமே பரிதாப்பத்துக்குரியவர்களாக அலைவதனால், எல்லோருடைய பரிதாபத்தையும் இரக்கத்தையும் சம்பாதித்துக் கொண்டு இருப்போமே அன்றி, எங்களுடைய பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை.
எப்பொழுதும் எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் எங்களுடைய உரிமைப் போராட்டத்தின் மூலம்தான் தீர்க்க முடியும். அடிக்க அடிக்க நாங்கள் ஓடிக்கொண்டிருந்தால் அடிப்பவனும் துரத்தி துரத்தி அடித்துக் கொண்டே இருப்பான்.
திரும்ப அடிப்பதன் மூலமாகத்தான் எங்களுடைய நிலையினை பரிதாபத்தில் இருந்து நீக்கலாம்.வலியவர்கள் வாழ்வார்கள் என்ற தத்துவம்தான் இந்த உலகத்தில் உள்ளது. வலிமையல்தான் எமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.
இக்கருத்து இன்று மட்டுமல்ல என்றைக்குமே ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்துக்கான திசைவழிப்பாதையை தெளிவாகவே முன்வைக்கின்றது.
சமகாலத்தில், தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் எழுகதமிழ் ஓர் அசைவாக காணப்படுகின்ற நிலையில், மேற்சொன்ன கூற்று, பல்வேறு வகையிலும் எழுகதமிழுக்கு தெளிவான செய்தியினை எடுத்துரைத்து நிற்கின்றது.
எழுக தமிழ் முன்வைக்கின்ற கோரிக்கைகள் முதற்கொண்டு, அதனை முன்னெடுக்கின்ற தரப்பினர் வரை பல்வேறு வகையிலும் முன்னர் இல்லாதவாறு பல்வேறு எதிர்கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த எதிர்கேள்விகளுக்கு, எதிர்கருத்துகளுக்கு பின்னால் பல்வேறு உள்நோக்கங்கள் காணப்பட்டாலும், எழகதமிழில் உள்நோக்கம் என்பது, ஈழத்தமிழர் தேசத்தின் மக்கள் சக்தியின் திரட்சியாகவே இருக்க முடியும்.
இதனைத்தான் 1983 கறுப்பு யுலை பட்டறிவில் இருந்து தலைவர் வே.பிரபாகரன் குறிப்பிடுகின்றார். அதாவது வலியது உலகில் வாழும். பரிதாப்பத்துக்குரியவர்களாக 'கோரிக்கைகளுடன்' இலங்கைத்தீவுக்குள் மட்டுமல்ல, வெளியேயும் அலைந்து திரிவதனால், கடந்த பத்து ஆண்டுகளில் ஈழத்தமிழின இரக்கத்தையும், பரிதாபத்தையும் பெற்றுக் கொண்டதே அன்றி, தீர்வை அல்ல.
இலங்கைதீவுக்கு படையெடுக்கின்ற வெளிநாட்டு அரச பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், எமது நிலைப்பாட்டை சர்வதேச தரப்புக்களுடன் முறையிட்டிருக்கின்றோம் என பல தடவை குறிப்பிட்டிருக்கின்றார்.
இதுதான் புலம்பெயர் தேசங்களிலும் நடந்திருக்கின்றது. ஆனால் தமிழர்களின் கோரிக்கைகளை எதிர்பார்ப்பினை இரக்கத்தோடும், பரிவோடும் 'அவர்கள்' கேட்டார்கள் தமிழ்கூறும் நல்லுலகிற்கு கூறப்படும்.
ஆனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, முறைப்பாடுகளில் காத்திரமான முறையில் சர்வதேச சக்திகளால் தீர்க்கப்பட்டுள்ளதா எனில் அது இல்லை என்பதாகவே இருக்கும்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் இரா.சம்பந்தன் ஏமாற்றப்பட்டுவிட்டார் என சமீபத்தில் பல ஊடகங்கள் தலைப்பிட்டிருந்தன.
காரணம் நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிகதிரையில் ஏற்ற விரும்பிய சர்வதேச சக்திகளுக்கு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது எதிர்பாப்புகள் சர்வதேச தரப்புக்கள் ஊடாக நிறைவேற்றப்படும் என காத்திருந்தனர்.
ஆனால் எதுவே உருப்படியாக நடக்காத நிலையில்தான், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பு தாம் சிறிலங்கா அரசாங்கத்தினால் மட்டுமல்ல, சர்வதேச சக்திகளாலும் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வாக பலரும் தமது சமீபத்திய செவ்விகளில் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறெனில் மீண்டும் கோரிக்கைகளுடன்தானே, 'எழுகதழும்' இம்முறை அறைகூவப்படுகின்றது என யாரும் கேட்கலாம். கோரிக்கைகளின் வழி மக்களை திரட்டுவதற்கான ஒரு கருவியாக இருக்கின்றதே அன்றி, திரளுகின்ற மக்கள் சக்திதான் வலிமைதான் இங்கு முக்கியமானது.
திரளுகின்ற மக்கள் சக்தி தான் ஈழத்தமிழர் தேசத்தினது உரிமைப் போராட்டத்தின் உயிர்ப்பையும் விழிப்பையும் உலகிற்கு காட்டுகின்ற ஒன்றாக இருக்க வேண்டும்.
வலியவர்கள் வாழ்வார்கள் என்ற தத்துவம்தான் இந்த உலகத்தில் போக்கில், எவ்வாறு ஈழத்தமிழர்கள் தமது வலிமை பெற்று தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவது ?
சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தலில் பங்கெடுப்பதனாலும், மாகாண சபைகளை பிடிப்பதாலும், பராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெறுவதாலும் ஈழத்தமிழினம் வலிமை பெற்றுவிடுமா ?
இவைகள் யாவுமே, தமிழர்கள் எதிர்பார்கின்ற நீதியினைiயும், அரசியல் இறைமையினையும் பெற்றுக் கொள்வதற்கான வலிமையினை தராது.
முள்ளிவாய்க்காலின் பின்னராக தமிழர்களின் ஜனநாயகப் வழிப் போராட்டத்தில், தேர்தல் அரசியலே தமிழர்களின் அரசியல்' என்ற நிலை கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் என்பது சிறிலங்காவின் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில், தேர்தல் அரசியலைக்கடந்து விடுதலைக்கான அரசியலுக்கான வலிமையினை, மக்கள் சக்தியின் வழியே கட்டமைப்பதானால்தான், ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புகளை இலங்கைத்தீவில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இன்றைய இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை, தமிழர் அரசியல் தரப்புக்கள் நன்குணர்ந்து தமது விடுதலைக்கான மூலோபாயங்களை வகுக்க வேண்டிய காலமிது.
இந்தியா-மேற்குலகம், சீனா, சிறிலங்கா என முத்தரப்பு இலங்கைத்தீவினை சுற்றிய புவிசார் அரசியலில் தரப்புக்களாக இருக்கின்றார்களே அன்றி, தமிழர்கள் அல்ல.
அன்று தமிழர்கள் இத்தில் ஒரு தரப்பாக மாறுவதற்குரிய வலிமையினை தமது ஆயுதப் போராட்ட வெற்றிகள் மூலம் அடைந்தார்கள்.
அதுவே சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ள வைத்திருந்ததோடு, வலுச்சமநிலையினை தந்திருந்தது.
இவ்வாறெனில், ஆயுதப் போராட்டத்தை ஊக்குவிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாக தமிழர்களை ஒரு தரப்பாக இச்சர்வதேச சக்திகள் எட்டுவதற்குதரிய வலிமையே இங்கு முக்கியமானது.
அந்த வலிமையினை ஆயுதங்களால் மட்டுமல்ல, ஆயுதங்கள் அற்ற முறையிலும் அறிவு வலிமையினால், அரசியல் வலிமையினை எட்டமுடியும். இதற்கு ஓர் உதாரணமாக வற்றிக்கானை நோக்கலாம்.
அதற்கு ஆயுதம் தரித்த இராணுவம் இல்லை. ஆனால் அது உலகில் தனது வலிமையுள்ள ஒன்றாக இருக்கின்றது எனில் அது தன் மதக்கட்டமைப்பினை ஓர் ஆயுதமாக கையாளுகின்றது.
இதுபோவே இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர்களும் தம்மை ஒரு தரப்பாக மாற்றுவதன் ஊடாகத்தான், எமது கோரிக்கைகளுக்கான தீர்வினை எட்டமுடியும்.
இதற்கான வலிமையினை, இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பகுதி அமைந்திருக்கின்ற கேந்திர முக்கியத்துவத்தினை, தமிழர்கள் தமது வலிமைக்கான முதலீமாக மாற்ற வேண்டும்.
அதாவது அரசியல் முதலீமாக மாற்ற வேண்டும். இதில் இருந்துதான் வலிமை கட்டமைக்கப்படும். இந்த வலிமைக்கான சக்தியே, மக்கள் திரட்சியாகும்.
கட்சிக்காக வேண்டாம், தெருக்காட்சிக்காக வேண்டாம் என்ற தேனிசை செல்லப்பாவின் எழுகதமிழ் பாடல் போல், எழுகதமிழ் என்பது ஒரு நாள் கூடிவிட்டு கலைகின்ற ஒரு கூட்டமாக அல்லாமல், ஈழத்தமிழர் தேசம் தனது வலிமையினை பெற்றுக் கொள்வதற்குரிய நல்லதொரு தொடக்கமாக மாற்ற வேண்டும்.
தாயக தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும், தமிழக் தமிழர்களும் ஈழத்தமிழத் தேசத்தின் வலிமைக்குரிய மக்கள் சக்தியாக திரட்ட வேண்டும்.
திரளுகின்ற இந்த வலிமையினை அறிவு வலிமையாக அரசியல் வலிமையாக மாற்றுவதன் ஊடாக, இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் ஈழத்தமிழர்கள் ஒரு தரப்பாக மாற முடியும்.
இது நோக்கிய தெளிவானதொரு நிகழ்ச்சி நிரலுடன் எழுகதமிழ் கட்டியங் கூறவேண்டும். இல்லாது போனால், தமிழர்கள் பரிதாப்பத்துக்குதரிய ஓர் இனமாக, கோரிக்கைகளுடன், உலகெங்கும் அலைந்து திரிந்து கொண்டு, பிறரது பரிதாபத்துக்கும், இரக்கத்துக்கும் உள்ளாவார்களே அன்றி, அவர்கள் தமக்கான தீர்வினை எட்டமுடியாது.
ஈழத்தமிழர் தேசத்தின் வலிமைக்கான வாயிலாக எழுகதமிழ் மாறுமா ?
Reviewed by Author
on
September 15, 2019
Rating:

No comments:
Post a Comment