கட்சி யாப்புக்கு அமைய நானே வேட்பாளர்! ரணில் திட்டவட்டம் -
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான் தான் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்றுக் காலை கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக ரணில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ரணிலிடம் இன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான் தான். இருப்பினும், எமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தவுள்ளேன்.
எனது வேண்டுகோளையும் மீறி தனிநபர்கள் பொதுவெளியில் பிரசாரக் கூட்டம் நடத்துகின்றனர். இது கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் குழப்பங்களை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் எமது கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வினவிய போது,
ரணில் விக்ரமசிங்க வேட்பாளர் என்று இணையத்தளங்களில் தான் செய்திகள் வந்திருக்கின்றன. கட்சியில் யாரும் இன்னும் அவ்வாறு சொல்லவில்லை.
நாளை ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்த பிரதமர் அழைத்துள்ளார். நான் பேச்சுக்குச் செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி யாப்புக்கு அமைய நானே வேட்பாளர்! ரணில் திட்டவட்டம் -
Reviewed by Author
on
September 07, 2019
Rating:

No comments:
Post a Comment