இந்துக்களும் -தீபாவளி தினமும்
மக்கள் மனதில் உள்ள இருளையும், அகந்தை, ஆணவம், தீய எண்ணங்களை நீக்கி, தர்மம், நேர்மை, ஒழுக்கம், பகிர்தல் எனும் தீபத்தை ஏற்றும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
தீபாவளி பண்டிகை இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களால் மட்டுமல்லாமல் சீக்கியர்கள் மற்றும் சமணர்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி தினத்தில் காலையில் லக்ஷ்மி பூஜை செய்து புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் புதிதாக வாங்கிய பொருட்களை வைத்து பூஜை செய்வது நல்லது. புத்தாடை அணிந்து வழிபடுவது நல்லது. இருப்பினும் அமாவாசை தினம் பிற்பகல் 12.10 மணிக்கு தான் வருவதால், மாலை நேரத்திலும் இறைவழிபாடு மிகவும் அவசியமாகப் பார்க்கப்படுகின்றது.
சில ஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி மாதத்தில் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த நாளான சுக்கிலப்பிரதமை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் அமாவாசை தின முன்தினம் அதாவது நரக சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
தீபாவளி பண்டிகையின் வரலாறு தொடர்பில் இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே.வைத்தீஸ்வரக் குருக்கள் தெரிவிக்கையில்,
தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியில் வருகின்றது. ஐப்பசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தி திதியில், அமாவாசைக்கு அண்மித்த நாட்களில் வருகின்றது. புராணங்களில் தீபாவளி தொடர்பில் பல கதைகள் கூறப்பட்டாலும் பெரும்பாலும் நரகாசுர வதம் தான் அனைவராலும் பேசப்பட்டுவருகின்றது.
கிருஷ்ண பரமார்த்தமா,தேவர்கள் அனைவரும் அறியும் வகையில் நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளியாகும்.
இறக்கும் தருவாயில் நரகாசுரன் கிருஷ்ணரிடம், இத்தனை நாளாக அனைவருக்கும் பல கொடுமைகள், பாவங்கள் செய்து விட்டேன்.
என் இறப்பை மக்கள் இன்பமாக கொண்டாட வேண்டுமென ஒரு வரம் கேட்டார். நரகாசுரனின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணர் வரத்தை வழங்கியதன் பலனாக இன்று தீபாவளி மக்களால் பட்டாசுகள் வெடித்தும், உறவுகளுடன் இணைந்தும் மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது.
தீபாவளிக்கு தீபங்களின் ஒளி,தீபங்களின் வரிசை எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீ ராமபிரான் வனவாசத்தை முடித்து மிதிலையில் பிரவேசித்த நாளில் மக்கள் எல்லோரும் அவரின் வரவினை தீபஒளியை ஏற்றி கொண்டாடியதன் தொடர்ச்சியாக இப்பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் வரலாறு உண்டு.
நாம் எமது மனத்திலே இருக்க கூடிய தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நல்ல சிந்தனையுடன் வாழவேண்டும்.ஒளி இருட்டான ஓரிடத்தில் பிரகாசத்தை வழங்கி அவ்விடத்தில் அனைவரும் மகிழ்வுடன் இருப்பதை போல தீபாவளி பண்டிகையும் இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காகவும் இப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இப்பண்டிகை உலகெங்கும் இந்து மக்களால் மிக சிறப்பாக குறிப்பாக இலங்கை,இந்தியா வாழ் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தீபாவளிக்கு முந்தைய தினம் எமதர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அதாவது பிதிர்களுக்கு தேவையான தர்ப்பணங்களை செய்யவதன் மூலம் நம் வாழ்வும் சுபீட்சமடையும்.அனைவரும் நாட்டுமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய பிரார்த்திப்போம் என்று தெரிவித்தார்.
இந்துக்களும் -தீபாவளி தினமும்
Reviewed by Author
on
October 27, 2019
Rating:

No comments:
Post a Comment